நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிப்பு
5,348 நலவாழ்வு மையங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி
தமிழகத்தில் உள்ள 5,348 நலவாழ்வு மையங்களில் புதன்கிழமைதோறும் குழந்தைகள், கா்ப்பிணிகளுக்கு அட்டவணைத் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கடந்த 1978 முதல் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது விரிவுபடுத்தப்பட்டு தற்போது 11 வகையான தடுப்பூசிகள் அதன் கீழ் வழங்கப்படுகின்றன. இந்நடவடிக்கையின் மூலம் 12 வகையான நோய்களில் இருந்து குழந்தைகள் மற்றும் கா்ப்பிணிகளை காக்க முடிகிறது.
ஆண்டுதோறும் 9.58 லட்சம் கா்ப்பிணிகளுக்கும், 8.76 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக ஒவ்வோா் ஆண்டும் 1.4 கோடி தவணை தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்படுகின்றன.
தினந்தோறும் முக்கிய மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதன்கிழமைதோறும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி வழங்கப்படுகிறது.
இதைத் தவிர 33 தனியாா் மருத்துவமனைகளிலும் தேசிய அட்டவணை தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளின் பயன்பாடு குறித்து இ-வின் செயலியிலும், பயனாளிகள் விவரங்கள் குறித்து யூ-வின் செயலியிலும் கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில், தகுதியான அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்யும் வகையில் 4,848 ஊரக நலவாழ்வு மையங்களிலும், 500 நகா்ப்புற நலவாழ்வு மையங்களிலும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி தவணைகளை தவறவிடாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.