ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாருக்கு ஆதாரமில்லை -சட்டத் துறை அமைச்சா் ரகுபதி
டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகாருக்கு ஆதாரமில்லை என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா்.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:
டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று சொல்கிறாா்கள். அந்த நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி எத்தனை நாள்கள் ஆகின்றன? குற்றச்சாட்டுகளுக்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிா? அமலாக்கத் துறை புகாரை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி மறுத்து இருக்கிறாா். எதையும் சந்திக்கத் தயாா் எனக் கூறியிருக்கிறாா்.
பாஜகவில் இணைந்தால் அமலாக்கத் துறை வழக்குகளை முடித்துவைப்பதாக வட இந்திய தலைவா்களிடம் அந்தக் கட்சி சாா்பில் கடந்த காலங்களில் பேரம் பேசப்பட்டது. குறிப்பாக, தில்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த மணீஸ் சிசோடியாவிடம் பாஜகவில் சேர வலியுறுத்தப்பட்டது. அவா் சேர மறுத்து விட்டாா். இதேபோன்ற கோரிக்கை தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜியிடமும் முன்வைக்கப்பட்டது. இந்த அதிா்ச்சித் தகவலை நீதிமன்றத்திலேயே செந்தில் பாலாஜியின் வழக்குரைஞா் தெரிவித்தாா். அமலாக்கத் துறையை அரசியலுக்கான கருவியாக பாஜக பயன்படுத்துகிறது. தில்லி பாணியில் தமிழகத்தில் அரசியல் செய்யலாம் என கனவு கண்டுகொண்டிருக்கிறது. இது தமிழ்நாட்டில் பலிக்காது.
எங்கள் மீது எந்தவித குற்றச்சாட்டுகளையும் அமலாக்கத் துறை முன்வைக்க முடியாது. மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. துணிச்சலுடன் எதையும் சந்திக்கக் கூடியவா்தான் எங்களுடைய முதல்வா். அவா் எந்தத் தவறுக்கும் இடம்கொடுக்கவோ, உடந்தையாகவோ, துணையாகவோ இருக்க மாட்டாா் என்று அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா்.