செய்திகள் :

Tattoo: சமந்தா கருத்து முதல் ஆதிக்கத்துக்கு எதிரான புரட்சி வரை; டாட்டூ சொல்லும் வரலாறு | Explained

post image

நடிகை சமந்தா ஒருமுறை இன்ஸ்டாகிராமில் லைவ் வந்தபோது ஒரு ரசிகர் 'பச்சை குத்திக் கொள்ள எந்த வாசகத்தை அல்லது படத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்?' என்று கேட்க, ` அவர், எப்போவும் பச்சை குத்திக்கக் கூடாதுனு எனக்கு நானே இப்போலாம் சொல்லிக்கிறேன். அதனால நீங்களும் எப்போவும் பச்சை குத்திக்காதீங்க" எனப் பேசினார்.

நடிகர் ஜெயசங்கர், ஜெயசித்ரா நடிப்பில் 1971-ம் ஆண்டு வெளியான 'சினிமா பைத்தியம்' என்ற படத்தில் நடிகர் ஜெய்சங்கரின் பரம விசிறியான ஜெயசித்ரா, தன் கையில் ஜெய் என்று பச்சை குத்திக் கொண்டிருப்பார். திரையில் தெரிவதையெல்லாம் உண்மையென நம்புவார். ஆனால், ஒருநாள் உண்மை தெரியவரும்போது, கொள்ளிக் கட்டையால் பச்சை குத்திய தனது கைப்பகுதியை எரித்துக் கொள்ள முயல்வார்.

சமந்தா - Tattoo

அதேபோல அரசியலிலும் ஒரு சம்பவம் உண்டு. ஒருமுறை எம்.ஜி.ஆர் தனது கட்சியைச் சேர்ந்தவர்கள் அண்ணாவின் உருவத்தைக் கையில் பச்சைகுத்திக் கொள்ள வேண்டும் என்று கூற, அ.தி.மு.க-வினர் பலர் தங்கள் கட்சி விசுவாசத்தை நிரூபிக்கும் வகையில் அண்ணா உருவத்தை தம் கையில் பச்சை குத்திக் கொண்டனர். பின்னர் அவர்களில் சிலர் வேறு கட்சிக்கு மாறிய போதுதான் அவர்களுக்குச் சோதனை தொடங்கியது. கையில் பச்சை குத்தியதை மறைக்க, முழுக்கைச் சட்டை அணிந்து திரிந்தனர். இன்னொருபக்கம், கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் டாட்டூ போட்டுக்கொண்ட 6 பேர் எச்.ஐ.வி-யாலும், பலர் தோல் சம்பந்தமான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது அரசு ஆவணம்.

இப்படி சினிமா பிரபலங்கள் தொடங்கி அரசியல்வாதிகள், பொதுமக்கள் வரை `பச்சை குத்துதல்' என்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தனைப் பிரச்னைக்கு காரணமான டாட்டூவின் வரலாறு என்ன? எப்போது எங்கே தொடங்கியது? இதன் மறைக்கப்பட்ட இன்னொரு பகுதியை அலசுகிறது இந்தக் கட்டுரை.

பழங்கால டாட்டூ டிசைன்கள் - Tattoo

அடையாளமிடுதல் எனப் பொருள்படும்படியான சமோவான் வார்த்தை டாட்டாவ். இந்த வார்த்தையிலிருந்து பிறந்ததுதான் டாட்டூ. 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கேப்டன் ஜேம்ஸ் குக் என்பவர்தான் இந்த வார்த்தையை ஆங்கிலத்துக்குக் கொண்டுவந்தார் எனக் குறிப்பிடப்படுகிறது. அப்போது முதல் சமீபகாலத்துக்கு முன்புவரை டாட்டூ வரையும் திறன் அப்பாவிடமிருந்து மகனுக்கு எனப் பரம்பரைப் பரம்பரையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. மேலும், பச்சை குத்துதல் என்பது ஒரு சமூகத்தில் தலைமைப் பொறுப்புக்கு ஒருவர் உயர்ந்துவிட்டார் என்பதைக் குறிக்கும் வகையில் பல்வேறு சமூகங்களில் பச்சை குத்துதல் எனும் விழாவே நடத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால், இந்த டாட்டூ எப்போது, எப்படிப் பிறந்திருக்கும்.

வேட்டையாடி உண்ணுதலில் தொடங்கி, போர்களால் தன் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வதுவரை இந்த மனிதம் இனம் பல்வேறு காயங்களைச் சுமந்திருக்கிறது. சாதாரணத் தோலுக்கும் வடு இருக்கும் தோலுக்குமான வித்தியாசத்தில் காணப்பட்ட அழகிலிருந்து இந்த டாட்டு கலாச்சாரம் தோன்றியிருக்கலாம். குறிப்பாகத் தென் அமெரிக்காவில் இப்படித்தான் இந்தக் கலாச்சாரம் தோன்றியிருக்கிறது என நம்புகிறார் 19-ம் நூற்றாண்டின் ஜெர்மன் இனவியலாளரும், ஆய்வாளருமான கார்ல் வான் டென் ஸ்டீனென் (Karl von den Steinen).

பாரம்பரிய டாட்டூவுடன் அல்ஜீரியாப் பெண் - 1935

இரத்தபோக்கைத் தடுக்க தாவரச் சாறுகளைக் காயங்களில் தேய்ப்பதால் வடு நிறமாற்றம் ஏற்படுகிறது. இதன் விளைவாக வரும் அலங்காரமும் பச்சை குத்திக்கொள்வதின் வரலாறாக இருக்கலாம். வட அமெரிக்க அப்பாசி(Apache), கோமாஞ்சே (Comanche) வீரர்கள் போர் காயங்களில் மண்ணைத் தேய்த்து, வடுக்களைப் பெரிது படுத்தியிருக்கின்றனர். அதன்மூலம் பழங்குடியினருக்கும் இந்தக் கலாச்சாரம் பரவியிருக்கலாம் என்கிறது ஆய்வு. அதே நேரத்தில் நியூ கினியாவின் பிக்மிகள் தோலில் உள்ள கீறல்களில் மூலிகைகளைத் தேய்த்து தொற்றுகளுக்கு சிகிச்சையளித்தனர். இதனால் நிரந்தர வடுக்கள் ஏற்பட்டன என்றும் அது பிற்காலத்தில் அடையாளமாகவும், பாதுகாப்பாகவும், அழகுக்கலையாகவும் வளர்ந்திருக்கலாம் எனப் பல்வேறு கதைகளும், கருத்துகளும், உறுதிப்படுத்தப்படாத ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

உலகில் முதன்முதலில் பச்சை குத்துதல் என்ற வழக்கம் கி.மு 6000-ம் ஆண்டு தென் அமெரிக்காவின் பெருவில், பண்டைய பழங்குடியினரில் ஒன்றில் தோன்றியிருக்கலாம் என்கிறது ஆய்வு முடிவுகள். ஆனால், அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி 5,200 ஆண்டுகள் பழமையான மம்மி எட்ஸி தி ஐஸ்மேன் இத்தாலிய - ஆஸ்திரேலிய எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மம்மியின் உடலில் 61 இடங்களில் பச்சை குத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பச்சைகுத்துதல்கள் அனைத்தும் மருத்துவம், அல்லது சடங்குகள் சார்ந்து இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

2,500 ஆண்டுகள் பழமையான சைபீரிய இளவரசனின் மம்மி - டாட்டூ

பெர்சியர்களிடமிருந்து பச்சை குத்துவதைக் கற்றுக்கொண்ட கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஆரம்பக் காலங்களில் (கிமு 8 முதல் 6 வரை) பச்சை குத்துவதைக் காட்டுமிராண்டித்தனம் என்றே கருதியிருக்கின்றனர். அதனால், தப்பிக்க முயலும் அடிமைகள், குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் பச்சைகுத்துதல் மெல்லத் தொடங்கி வளர்ந்திருக்கிறது. எகிப்தியர்கள், சீனர்கள், ஜப்பானியர்கள், இந்தியர்கள் எனப் பெரும்பாலான பண்டைய கலாச்சாரங்களின் ஒரு பகுதியாகப் பச்சை குத்துதல் இருந்திருக்கிறது.

டாட்டூ விவகாரத்தில் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் சிக்கல்கள் இருந்ததுபோல, ஜப்பானியக் கலாச்சாரத்திலும் சிக்கல் இருந்தது. பச்சை குத்துதலை ஜப்பான் கலாச்சாரம் ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. இது பெரும் குற்றச் செயல்களான யாகுசா (சூதாடுதல், வழிப்பறி, கொள்ளை)வுடன் தொடர்புடையது எனக் குறிப்பிட்டுப் புறக்கணித்தது. அதனால், சட்டவிரோதிகளுக்கான (நெற்றிகளிலும் கை,கால்களிலும்) பச்சை குத்துதல் தண்டனைகள் வழங்கப்பட்டன. இந்தக் குற்றவியல் பச்சை குத்தப்பட்டவர்கள் முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப்பட்டனர். அவர்களுடனான வணிகம் மட்டுமல்லாமல் எந்த வேலையிலும் அவர்களை பணியமர்த்தப்படாமல் முற்றிலுமாக புறக்கணித்தனர்.

ஜப்பான் டாட்டூ

அதே காலகட்டத்தில், சமூகத்தின் கீழ் அடுக்கிலிருந்த மக்கள், இன்றைய ஜப்பானிய அலங்கார பச்சை குத்தல்களுக்கு அடிப்படையாக இருக்கும் 'ஐரேசுமி' எனப்படும் தங்கள் சொந்த பச்சை குத்தும் வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் பச்சை குத்தியிருப்பவர்கள் அனைவரும் யாகுசா குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்ற அந்த பிம்பத்தை அடித்து உடைக்கும் ஒரு புரட்சிகரமான செயல்பாடாக 'ஐரேசுமி' பச்சைகுத்துதல் மாறியது. அதற்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் இருந்தபோதிலும், பச்சை குத்துதல் பயன்பாட்டை மீட்டுருவாக்கம் செய்தனர்.

மத்திய இந்தியாவில் காணப்படும் 10,000 ஆண்டுகளுக்கும் பழமையான பழங்கால பாறை ஓவியங்களில் 'டாட்டூ' அலங்காரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பலநூறு ஆண்டுகளாக இந்தியாவிலும் இந்தப் பச்சைகுத்தும் கலாச்சாரம் இருந்ததாக வரலாற்று, மானுடவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தியாவைப் பொருத்தவரை பச்சை குத்தும் வழக்கம் பழங்குடி மக்களிடம் இன்றும் காணப்படுகிறது. இந்தியாவில் பச்சை குத்துதல் அடையாளத்துக்காக, பாதுகாப்புக்காக, அதிஷ்டத்துக்காக, பக்திக்காக, அழகுக்காக எனப் பல்வேறு முறையில் பயன்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு சில பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையைப் பார்க்கலாம்....

பழங்குடியினப் பெண் - டாட்டூ

அபதானி பழங்குடியினர்:

அருணாச்சலப் பிரதேசத்தில் வாழும் அபதானி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் இளம்பெண்களின் முகத்தில் கோடுகளை பச்சைகுத்தும் நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள். ஒரே பகுதியில் பல்வேறு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்வதுண்டு. அப்படிப் பிறப் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் இனத்து அழகான பெண்களைக் கடத்திக் கொண்டு செல்வது வழக்கமான இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதனால், அவர்களின் அழகைக் கெடுக்கும் வகையில், அவர்களின் முகத்தில் கோடுகளை வரைகிறார்கள். அபதானி பச்சை குத்தும் நடைமுறையில், தோலில் முட்களின் மூலம் கோடு வரைந்து, அடர் நீல நிறத்துக்கு விலங்குகளின் கொழுப்பைச் சூடாக்கி பச்சை குத்தப்பட்டது. அதனால் ஏற்படும் காயம், தொற்று போன்றவற்றால் அது பெரிதான வடுவாகவும், பச்சை குத்துதலாகவும் மாறும். 1970-களில்தான் இந்திய அரசு இந்த நடைமுறைக்குத் தடை விதித்தது. ஆனால் வடகிழக்கில் இன்னும் முறையான அரசு அதிகாரம் செல்லுபடியாத இடங்களில் இந்த நடைமுறை இன்னும் தொடர்வதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

பழங்குடியின டாட்டூ

சிங்போ பழங்குடியினர்:

அஸ்ஸாமிலும், அருணாச்சலப் பிரதேசத்திலும் வாழும் சிங்போ பழங்குடியின மக்கள், ஆண் - பெண் எனத் தனித்தனியாக பச்சைகுத்துதல் விதிகளை வகுத்திருக்கிறது. திருமணமான பெண்கள் கணுக்கால் முதல் முழங்கால் வரை இரு கால்களிலும், ஆண்கள் தங்கள் கைகளிலும் பச்சை குத்திக் கொள்கின்றனர். திருமணமாகாதவர்களுக்குப் பச்சை குத்துதல் தடை செய்யப்பட்டிருக்கிறது. நாகாலாந்தின் வேட்டைக்காரர்களான கோன்யாக்கு இனத்தைச் சேர்ந்தவர்கள், போரில் தங்கள் திறமையையும், எண்ணிக்கையையும் குறிக்க முகங்களில் பச்சை குத்திக் கொண்டனர்.

போரில் இறந்த பிறகு உரிய அங்கீகாரம் கிடைக்கவும், பழங்குடிகளின் அடையாளத்தை நிறுவவும் இவர்கள் பச்சைகுத்திக்கொள்கிறார்கள். மேலும், பச்சை குத்தும்போது ஏற்படும் வலியைத் தாங்குவது ஆண்மை என்றும், தைரியம் என்றும் ஆண்கள் கருதுகின்றனர். பச்சை குத்திக்கொள்ளும்போது ஏற்படும் வலியைத் தாங்கும் பெண்களுக்குப் பிரசவ வலியைப் பயிற்றுவிக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது.

அபதானி பழங்குடியினப் பெண்

பைகா பழங்குடி:

பைகா பழங்குடியினப் பெண்கள் தங்கள் பச்சை குத்தும் பயணத்தை வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே தொடங்குகிறார்கள். 8 முதல் 10 வயதுக்குள், அதாவது பருவமடைவதற்கு முன்பு, நெற்றியில் முதல் பச்சை குத்திக் கொள்கிறாள். இந்த பச்சை குத்துவதுதான் அவள் பெண்மையுடன் மாறுவதற்கான அடையாளமாக மாறுவதாகவும், விரைவில் தனது வீட்டையும் குடும்பத்தையும் நிர்வகிக்கும் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளத் தயாராகிறாள் என்பதை அவளுக்கு நினைவூட்டவும் இந்த முறை பின்பற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், நமது ஊரில் மஞ்சள் நீராட்டுவிழா நடத்துவதுபோல, அந்தச் சிறுமி திருமணத்துக்குத் தயாராகிவருகிறாள் என்பதைக் குறிப்பிடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. அந்த சிறுமி பருவ வயதை நெருங்கிவிட்டால், அதாவது 15 முதல் 18 வயதுக்குள், அவள் முதுகில் பச்சை குத்தப்படுகிறது. அதன்மூலம் அவளுடைய கவர்ச்சியை அதிகரிப்பதாக நம்புகிறார்கள். அந்தப் பெண்களின் பாரம்பரிய உடையும், முதுகில் குத்தப்பட்ட டாட்டூ வெளியில் தெரியும்படி தான் வடிவமைக்கப்படுகிறது. அதற்குப் பிறகு ஒவ்வொரு வருடமும் அந்தப் பெண் கைகளில் ஒன்றன்பின் ஒன்றாகப் பச்சை குத்திக் கொள்கிறாள். அதன்மூலம் சமூகத்தில் அவளின் பங்களிப்பைக் குறிப்பதாகவும், சடங்குகள், சமூக நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதைக் காட்டுவதாகவும் நம்புகிறார்கள்.

திருமணமானதுடன் அந்தப் பெண்ணுக்குக் கால்களில் பச்சை குத்தப்படுகிறது. இது வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அந்தப் பெண் முழுமையாக ஈடுபடுவதைக் குறிக்கும் ஒரு அடையாளமாகும். பிரசவத்திற்குப் பிறகு, இறுதியாக அந்தப் பெண்ணின் மார்பில் பச்சை குத்தப்படுகிறது. இது தாய்மையையும், அவளுடைய குடும்பத்திற்குள் அவள் வகிக்கும் பங்கையும் குறிக்கும் ஒரு வடிவமைப்பு. இப்படி பைகா பெண்களுக்கு, இந்த பச்சை குத்தல்கள் ஒரு வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்கிறது. ஆனால், பெண்களைக் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே இதன் அடிப்படை நோக்கமாக நம்மால் கவனிக்க முடிகிறது.

தமிழ்நாடு:

தமிழ்நாட்டைப் பொருத்தவரை பச்சை குத்துதல் என்றால் அது குறவர் சமூக மக்கள்தான் பிரதானம் என்ற நிலை இன்றளவும் நீடிக்கிறது. காடுகளிலிருந்து நாடோடி சமூகமாக மாறிய குறவர் சமூகம், காலப்போக்கில் டாட்டூ கலைக்கு பிரத்தியேகமானவர்களாகக் கருதப்படுகின்றனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய திருச்சியைச் சேர்ந்த சீதா, ``எங்கள் சமூக மக்கள் கலைகளில் கை தேர்ந்தவர்கள். அப்போதுமுதல் இப்போதுவரை பச்சை குத்துதலில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்கள். ஆனால், சமீபமாக டாட்டூ எனும் மாடல் கலாச்சாரம் பெருகிவிட்டதால் அதில் பெரியளவில் எங்கள் சமூகம் இப்போது இல்லை.

சீதா

ஒவ்வொரு பச்சை குத்துதலுக்கும் ஒரு காரணம் உண்டு. பச்சை குத்திக்கொள்பவர்களின் அடிப்படை ஒன்றுதான் 'மரணமடைந்தால் அணிந்திருக்கும், உடை, நகை என எதுவும் என்னுடன் வரப்போவதில்லை. அதனால், பச்சை குத்திக்கொண்டால் அது என்னுடன் வரும்' எனக் கருதுகிறார்கள். மேலும், தேள் படத்தைப் பச்சை குத்தினால் தேள் கடிக்காது, பாம்பு படத்தை பச்சைகுத்தினால் பாம்பு கடிக்காது, கடவுள் பாதுகாப்புக்காகக் கடவுள் சார்ந்த வேல், சூலம், உடுக்கை, கடவுள் படங்கள் எனக் குத்திக்கொள்வதும் உண்டு. சிலர் ஜோசியர் கூறும் படங்களையும் பச்சைகுத்திக்கொள்வார்கள். அதன்பிறகு, காதலர்கள், கணவன் - மனைவி பெயர்கள், குழந்தையின் கைதடம் எனக் காலத்துக்கு ஏற்றார்போல் எல்லாம் மாறிவருகிறது.

எங்களைப் போலத் தத்ரூபமாக பச்சைகுத்துபவர்கள் யாரும் இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இப்போது எங்களிடம் பச்சைகுத்திக்கொள்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால், எங்கள் குழந்தைகளின் கைகளில் இன்றும் வரையும் கலை அருமையாக இருக்கிறது. அவர்களுக்கு அரசு சார்பில் உரியப் பயிற்சி கொடுத்தால் இன்னும் மின்னுவார்கள்" எனத் தகவலோடு கோரிக்கையையும் சேர்த்துப் பேசிமுடித்தார். தமிழ்நாட்டைப் பொருத்தவரை பழங்குடியின மக்களிடம் இன்றும் பச்சைகுத்தும் வழக்கம் இருக்கிறது.

டாட்டஊ

தமிழ்நாட்டின் சில சமூக மக்களிடம் இருக்கும் நம்பிக்கையில், `இறந்தவருக்கு இறந்தபிறகு கிடைப்பது உடலில் குத்திய பச்சையும், உறவினர் கொண்டு வரும் பச்சை தானியமும்' என்ற நம்பிக்கை தென்மாவட்டத்தின் ஒரு சமூகத்தினரிடம் தொடர்கிறது. இறந்தவர் வீட்டிற்கு உறவினர்கள் பாத்திரத்தில் நிரப்பிய பச்சை நெல் கொண்டு செல்வது இன்றளவும் பின்பற்றும் பண்பாடு. பச்சை குத்திய உடம்பில் நோய் தங்காது என்பதும் அவர்களின் நம்பிக்கை. இப்படி இந்தியா முழுவதும் பச்சை குத்திக்கொள்ளும் பழங்குடியினர் தங்களின் (சமூக, சாதி, அடக்குமுறை) அடையாளம், மரணத்துக்குப் பிறகான வாழ்க்கைக்கு, தீய சக்தி, விஷ ஜந்துக்கள், மரணம் போன்ற ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு என இந்த மூன்று காரணங்களுக்காகத்தான் பச்சைகுத்திக் கொள்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான கிராமப்புறச் சமூகங்களில், "கோட்னா" என்று அழைக்கப்படும் பச்சை குத்திக்கொள்ளும் முறை கட்டாயமாக இருந்தது. அதை எதிர்க்கும் பெண்களின் ஒருகுழு, பச்சை குத்திக்கொள்வதும், ஆபரணங்கள் அணிவதற்காகக் காது மற்றும் மூக்கில் துளையிட்டுக்கொள்வதும் பெண்களை அடிமைப்படுத்துவதன் அடையாளங்கள் என்ற எண்ணத்துடனேயே வளர்ந்தோம். அதற்குக் காரணம், எங்களின் அம்மாக்கள். அவர்களின் உடலில் இரண்டு இடங்களிலும், அவரின் அம்மா இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களிலும் பச்சை குத்தியிருந்தனர்.

ராமநமி இயக்கம்

நான் பச்சை குத்திக்கொள்ளாவிட்டால், நீ புனிதமற்றவள் என்று கருதி உன் புகுந்தவீட்டில் இருப்பவர்கள் உன் கைகளால் தண்ணீர்கூட வாங்கமாட்டார்கள் என்று மிரட்டப்பட்டதாக எங்களின் பெற்றோர்கள் கூறியிருக்கிறார்கள். பச்சை குத்திக்கொள்ளாமல் இருப்பதென்பது எனக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வழிமட்டுமல்ல. நான் போராடிப் பெற்ற சுதந்திரத்தை உறுதிப்பட வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாகும். அதனால், எனக்கு நானே கோடு கிழித்து பச்சை குத்திக்கொள்ளமாட்டேன்" எனப் புரட்சிக் கொடியையும் தூக்கியிருக்கிறார்கள்.

ராமநமி இயக்கம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் பட்டியலின ராம பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதாலும், பொதுக் கிணறை பயன்படுத்த மறுக்கப்பட்டதாலும் 19-ம் நூற்றாண்டில் இந்துகளால் ராமநமி சமாஜ் எனும் இயக்கம் தொடங்கப்பட்டது. அதாவது கடவுள் ஒரு இடத்தில் மட்டுமல்ல, ஒரு சமூகத்துக்குமட்டுமல்ல என்பதை உணர்த்தும் விதமாக உடல் முழுவதும் ராமரின் பெயரைப் பச்சைக் குத்திக்கொண்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அந்த எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சியாக இப்போதும், சத்தீஸ்கர் மாநிலத்தின் குறைந்தது நான்கு மாவட்டங்களில் 100,000 மேற்பட்ட எண்ணிக்கையிலான ராம்நாமிகளின் பச்சை குத்திக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இப்படி டாட்டு போட்டுக்கொண்டும், டாட்டூ போட்டுக்கொள்ளமாட்டோம் என்றும் டாட்டூவை எதிர்ப்புக்கான ஆயுதமாகவும் பயன்படுத்தியிருக்கிறது இந்த மனித இனம்.

சித்தர் மரபு, சித்த வைத்தியம் என உணவையே மருந்தாக்கிய தமிழ்ச் சமூகம் பச்சை குத்த மையையும் அப்படியே தயாரித்திருக்கிறது. மஞ்சள் பொடியுடன் அகத்திக் கீரை சேர்த்தரைத்து, ஒரு துணியில் கட்டி, தீயிட்டு எரித்துக் கரியாக்கியிருக்கிறார்கள். அந்தக் கரியில், தண்ணீர் விட்டு பசையாக்கி, கூர்மையான ஊசியினால் அந்தப் பசையைத் தொட்டுத் தோலில் குத்திக் குத்தி தேவையான உருவங்களை வரைந்து, பின் வெந்நீரில் கழுவி சுத்தம் செய்வது குறவர் முறை. மற்றொரு முறையில், மஞ்சள், விளக்கெண்ணெய், கரியாந்தழைச்சாறு கலவையே பச்சைக்கான மூலம்.

அவுரி

சில இடங்களில் காட்டு அவுரி நீலச் செடி சாறும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனுடன் தாய்ப்பால், அகத்திச்சாறு, பாகற்காய் சாறு இம்மூன்றில் ஒன்றைக் கலந்து ஊசி, மூங்கில் முள், எலுமிச்சை முள் கொண்டு கோட்டுருவாக வரைந்து, அந்தப் படத்தின் மீது பச்சை குத்துகின்றனர். கரியாந்தழைச்சாற்றின் குரோமிய ஆக்சைடே தோலில் பரவி வடிவம் அழியா பச்சை வண்ணம் தருகிறது.

இப்படி பழங்குடியின மக்கள், அல்லது அடக்குமுறைக்குள்ளான மக்களிடம் மட்டுமே இருந்த இந்த டாட்டூ கலாச்சாரம் பொதுமக்களிடம் வந்ததற்கு சில காரணங்கள் உண்டு. பிரிட்டிஷ் ஆட்சியின் போது (1858–1947), காலனித்துவ அதிகாரிகள் இந்தியாவில் பச்சை குத்துவதை "காட்டுமிராண்டித்தனமானது" எனக் குறிப்பிட்டுத் தடைவிதித்தனர். அதனால், பல இந்தியர்களுக்கு, பச்சை குத்துதல் என்பது எதிர்ப்பின் மொழியாக உருவெடுத்தது. அதன் தொடராக மெல்ல தமிழ்ச்சமூகத்தில் தந்தை, கணவனின், தாயின் பெயர்கள் பச்சைகுத்திக்கொள்ளப்பட்டன.

டாட்டூ கலைஞர் மல்லிகா

1900-களின் பிற்பகுதியில், பிரபலமான அமெரிக்கப் பத்திரிகைகளில் பச்சை குத்துதல் தொடர்பான படங்கள் வெளியாகத் தொடங்கி ஜனரஞ்சகமாக்கத் தொடங்கியது. 1972-ம் ஆண்டில் 'ஃபேஷன்' என்ற வடிவத்தில் பண்டைய கலையின் மறு தோற்றங்கள் என்ற அடிப்படையில் பாப் பாடகர்கள் தொடங்கி, சினிமா நட்சத்திரங்கள் வரை டாட்டூ வரைந்துகொள்ளத் தொடங்கினர். இந்த மாற்றத்துக்கு அடித்தளமிட்டவர்களில் முக்கியமானவர்கள் 1981-ம் ஆண்டு MTV பாப் இசைக் கலைஞர்கள் இளைஞர்களிடையே பாப் இசைக் கலாச்சார உரையாடலைத் தொடங்கினர்.

அப்போதுதான் இந்த டாட்டூ விவகாரம் உலகளாவிய பச்சை குத்தல் மரபுகளைத் தனித்துவமான வழிகளில் மக்களிடம் சேர்ந்தது. இதன் உச்ச வடிவமாக மாறியது ஹவாய் தீவில் நடத்தப்படும் டாட்டூ பாரம்பரியத் திருவிழா. ஹவாய் தீவில் டாட்டூ இல்லாமல் யாரும் இருக்கக் கூடாது. ஆண்கள் டாட்டூ குத்திக்கொள்ளவில்லை எனில் திருமணத்திற்குப் பெண் தரமாட்டார்களாம். மாறாத மச்சம் போன்ற அங்க அடையாளங்களில் ஒன்றாக, முக்கிய ஆவணமாக டாட்டூ அங்கீகரிக்கப்படுகிறது.

டாட்டூ கலைஞர் மல்லிகா

இன்று இளைஞர்கள் பெரிதும் ஆர்வம் செலுத்தும் டாட்டூ குறித்து மேலும் தெரிந்துகொள்ளச் சென்னையில் Laughing Budda Tattoos ஸ்டுடியோ நிறுவனர் டாட்டூ கலைஞர் மல்லிகாவைத் தொடர்புகொண்டு பேசினோம். அவர், ``மௌரி ஸ்டைல், டிரெடிஸ்னல் ஸ்டைல், அமெரிகன் டிரெடிஸ்னல் ஸ்டைல், மினிமஸ் ஸ்டைல், டாட் வொர்க் ஸ்டைல், லைன் ஸ்டைல் இப்படி டாட்டூவில் 15 முதல் 20 ஸ்டைல் இருக்கிறது. முன்பெல்லாம் ஹார்ட், ஹார்ட் பீட், பட்டாம்பூச்சி, பூ போன்றவைதான் ட்ரெண்டில் இருந்தது. இப்போதெல்லாம் அப்படி யாரும் பெரிதாக விரும்புவதில்லை. பெரும்பாலான இளைஞர்கள் 'minimalist sticker tattoo'. அதாவது சிறிய வகையிலான டாட்டூகள், அதிக வேலைப்பாடுகளுள்ள கலைநயமிக்க artistic டாட்டூகளையே விரும்புகிறார்கள்.

உடலில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் டாட்டூ போட்டுக்கொள்ளலாம். ஆனால் தற்போது மேல்கை பகுதியில் போட்டுக்கொள்ளவே விரும்புகிறார்கள். தவறான டாட்டூ ஸ்டுடியோகளில், போதுமான சுத்தமில்லாத, டாட்டூவை முறையாகப் படிக்காதவர்களின் ஸ்டுடியோகளில் டாட்டூ போட்டுக்கொள்வதால் பக்கவிளைவுகள் வரலாம். தற்போது முழு கையிலும் டாட்டூ போடுவதற்கு ரூ,5000, ரூ,6000 என்றெல்லாம் வாங்கிக்கொண்டு டாட்டூ போடுகிறார்கள். அதெல்லாம் பாதுகாப்பானதாக இருக்குமா என்பது சந்தேகமே. அதே நேரம் டாட்டூ போட்டுக்கொள்ள விரும்புபவர்கள் சரியான டாட்டூ ஸ்டூடியோவை ஒன்றுக்கு இரண்டுமுறை சோதித்து, அவர்களிடம் டாட்டூ போட்டுக்கொண்டவர்களிடம் விசாரித்து, ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

டாட்டூ கலைஞர் மல்லிகா

பிரபலமாக இருக்கிறார்கள், வைரலாக இருக்கிறார்கள் என்பதால்மட்டும் ஒருவரைத் தேர்வு செய்யாதீர்கள். சரியான அளவிலான ஊசிகளை, அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் மெட்டலில் செய்யப்பட்ட ஊசிகளைப் பயன்படுத்துகிறார்களா? அது சுத்தமாக இருக்கிறதா? ஒருவருக்கு ஒரு ஊசிதான் பயன்படுத்துகிறார்களா என்பதையெல்லாம் முறையாக விசாரித்து டாட்டூ போட்டுக்கொள்ள வேண்டும். ஒருவேளை அது தவறான ஊசியாக இருந்தால், உங்களின் தோல் கடுமையாகப் பாதிக்கப்படும். பக்கவிளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" என்றார்.

அதிகரித்து வரும் இந்த டாட்டூ கலாச்சாரத்தின் சாதகங்கள் என்ன... பாதகங்கள் என்ன? சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் வானதியிடம் கேட்டோம்…

டாட்டூவை ஆசையாகப் போட்டுக் கொள்கிறவர்களுக்கு அதன் பாசிட்டிவ்வான பக்கங்கள் மட்டுமே தெரியும். ஆனால், அதன் தெரியாத இன்னொரு பக்கமாக டாட்டூவினால் ஏற்படும் பக்கவிளைவுகள், பிரச்சினைகள் போன்றவற்றை நிறையப் பார்க்கிறோம். டாட்டூவினால் ஏற்படும் தொற்று, அதில் பயன்படுத்தப்படும் மையினால் ஏற்படும் ஒவ்வாமை, சருமத்தில் கட்டிக் கட்டியாக உருவாகும் பிரச்னை (Granula changes ), தழும்பு போல உருவாகும் கீலாய்டு (Keloid) பிரச்னை என பல்வேறு நோயாளிகளைப் பார்க்கிறோம். அதனால் ஒரு சரும நல மருத்துவராக டாட்டூவை என்னால் பரிந்துரைக்க முடியாது.

சருமநல மருத்துவர் வானதி

பச்சை குத்துவதும், டாட்டூவும் கிட்டத்தட்ட ஒன்றுதான். பச்சை குத்துவதில் நாம் எதிர்பார்க்கிற டிசைன் 100 சதவிகிதம் பர்ஃபெக்ட்டாக வராது. டாட்டூவில் துல்லியமாக டிசைன்கள் போடுகிறார்கள். டாட்டூவில் பல நிறங்களில் மையும் கிடைக்கிறது. ஆனால், பச்சை குத்துவதற்கு அந்தக் காலத்தில் தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட இயற்கைச் சாயங்களை மட்டுமே பயன்படுத்தினார்கள். அதனால் பச்சை குத்துவதால் பெரிய பிரச்னைகள் எதுவும் வந்ததில்லை. பச்சை குத்தும் மையும் எளிதில் போய்விடும். ஆனால், தற்போது டாட்டூ போடுவதற்காக மிகவும் அடர்த்தியான மையினை (Strong dyes) பயன்படுத்துகிறார்கள். அதன் அடர்த்தி காரணமாகப் பக்கவிளைவுகள் ஏற்படவே சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன.

டாட்டூவினால் பலவிதமான சரும நலத் தொந்தரவுகள் உண்டாகலாம். ஸ்கார் சார்காயிடு (Scar sarcoid), ஸ்கார் க்ரானுலோமா (Scar granuloma) போன்ற பிரச்னைகள் வரலாம். எனவே, டாட்டூ போட்டுக்கொள்ள விரும்புபவர்கள், டாட்டூ குத்தும் ஊசி சுகாதாரமாக இல்லாதபட்சத்தில் ஹெப்படைட்டிஸ் பி, ஹெச்.ஐவி, சருமத்தில் உண்டாகும் டியூபர்குளோசிஸ், சில தொற்றுகள், தொழுநோய் போன்றவை ஏற்படும் அபாயமும் உண்டு. டாட்டூ போடுகிறவர் தொழில்முறை கலைஞரா என்று முதலில் பார்க்க வேண்டும். உடலில் டாட்டூ குத்துகிற இடம், அந்த இடத்தில் டாட்டூ குத்துவது பாதுகாப்பானதா என்பதையும் கவனிக்க வேண்டும். டாட்டூவில் பயன்படுத்தப்படும் மையினால் ஒவ்வாமை ஏற்படுமா என்பதை முடிந்தால் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

டாட்டூ

டாட்டூவுக்கு பயன்படுத்தப்படும் ஊசி புதிதானதா என்று முக்கியமாகக் கவனிக்க வேண்டும். டாட்டூவை அழிப்பது மிகவும் சவாலான காரியமாகவே இருக்கும். அது ஒரே அமர்விலும் (Sitting) நடந்துவிடாது. பல அமர்வுகள் தேவைப்படும். அதனால் பொறுமை அவசியம். டாட்டூ குத்தும்போது என்ன வலி ஏற்பட்டதோ, அதைவிடப் பல மடங்கு வலியையும் அதை அகற்றும் லேசர் சிகிச்சையில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, பொறுமையாகப் பல அமர்வுகளில் வலியினைப் பொறுத்துக் கொண்டு டாட்டூவை அகற்றுவதற்கு உளவியல் ரீதியாகவும் தயாராக வேண்டும்." என்றார்.

நீங்கள் டாட்டூ போட்டுக்கொள்ள விரும்பியிருக்கிறீர்களா? உங்கள் அனுபவம் என்ன என்பதை கமெண்டில் கூறுங்கள்!

நரமாமிசம் : மனித கறியை உண்ணும் மனிதர்கள் - விரிவான வரலாறு!

மனிதர்களால் மனிதக்கறியை உண்பது நரமாமிசம் அல்லது ஹியுமன் கானிபலிசம் என்று அழைக்கப்படுகிது. ஆங்கிலத்தில் இதை anthropophagy என்று அழைக்கிறார்கள். பொதுவில் கானிபலிசம் என்பதன் பொருள் ஒரு உயிரினம் அல்லது வி... மேலும் பார்க்க

வானிலையும், வானொலி செய்த சதியும்! - கோடை தினப் பகிர்வு| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

`வீடு கட்டும் திட்டம் இருக்கா?’ - கிச்சன் டு பெட்ரூம்... பக்காவாக வடிவமைக்க சூப்பர் டிப்ஸ்!

வீடு கட்டுவது கனவாக இருந்தாலும், பட்ஜெட் பற்றி யோசிக்கும் போது செலவுகளை குறைக்க பல ஆசைகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வேண்டியிருக்கும். பில்டர்களிடம் கொடுத்து வீடு கட்டுபவர்க... மேலும் பார்க்க

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

துணிகளில் இருக்கும் XL, XXL அளவுகளில் X என்ற எழுத்துக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

பொதுவாக துணிகள் எடுத்து பார்க்கும் போது அதன் விலையை கவனிப்போம். அடுத்தபடியாக அதன் சைஸ் என்னவென்று பார்ப்போம். நமக்கு ஏற்ற சைஸை தேர்வு செய்வோம்.XS, S, M, L, XL, XXL, XXXL எழுத்துகளை நாம் துணிகளில் அளவி... மேலும் பார்க்க