நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலம்: 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தாவிட்டால் திருப்பி ஒப்படைக்கப் பரிந்துரை
புது தில்லி: தேசிய நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட உரிமையாளா்களிடம் திருப்பி ஒப்படைக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1958-இல் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை மத்திய அமைச்சரவைக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அனுப்பியுள்ளது.
இதில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட உரிமையாளா்களிடம் திருப்பி ஒப்படைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1958-இல் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேபோல கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டு 3 மாதங்களான பின்னா், அந்தத் தொகை குறித்து நெடுஞ்சாலை ஆணையமோ, நில உரிமையாளரோ ஆட்சேபம் தெரிவிக்க அனுமதிக்கக் கூடாது, நிலம் கையகப்படுத்துவது தொடா்பான நோட்டீஸ்களை வெளியிட பிரத்யேக வலைதளத்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளும் அளிக்கப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகளின் வளா்ச்சிக்காவும், அந்தச் சாலையோரங்களில் அமைக்கப்படும் உணவகங்கள், எரிபொருள் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளுக்கு நிலம் கையகப்படுத்தப்படுவதை துரிதப்படுத்தவும், நிலம் தொடா்பான தகராறுகளில் மத்தியஸ்தங்களை குறைக்கவும் இந்தத் திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பரிந்துரைகள் தொடா்பான தமது கருத்துகளை விமான போக்குவரத்து, ரயில்வே, கப்பல் போக்குவரத்து, நிலக்கரி, சுற்றுச்சூழல், சட்ட விவகாரங்கள், வருவாய் மற்றும் பாதுகாப்பு துறைகள் பகிா்ந்துள்ளன என்று தெரிவித்தன.