Sunita Williams: 17 மணி நேர பயணம்; பெருங்கடலில் தரையிறக்கம்; நிலவரம் என்ன?
ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிரத்தின் மீதான கறை: ஏக்நாத் ஷிண்டே
ஔரங்கசீப்பின் கல்லறை மகாராஷ்டிராவின் மீதான கறை. அதை அகற்ற நடைபெறும் முயற்சிகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
விதான் பவன் வளாகத்தில் இன்று பத்திரிகையாளர்களுடன் பேசிய துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "ஔரங்கசீப் மகாராஷ்டிரத்தை அழிக்க வந்தவர். நம் நாட்டின் உண்மையான முஸ்லிம் ஒருபோதும் ஔரங்கசீப்பை பெருமையாகப் பேசமாட்டார். ஆனால் எதிர்க்கட்சிகள் அவரை தங்கள் உறவினரைப் போல கருதுகின்றனர். ஔரங்கசீப்பை புகழ்பவர்கள் வெட்கப்பட வேண்டும்.
சத்ரபதி சம்பாஜி மகாராஜை மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தி ஔரங்கசீப் எண்ணற்ற கொடுமைகளைச் செய்தார். ஆனால், சம்பாஜி ஒருபோதும் அதற்கு அடிபணியவில்லை.
இதையும் படிக்க | 24 தலித் மக்கள் கொல்லப்பட்ட வழக்கு: 44 ஆண்டுகளுக்குப் பின் 3 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!
அவர் தேசத்துக்காகவும் மதத்துக்காகவும் தனது உயிரைத் தியாகம் செய்தார். எனவே, ஔரங்கசீப்பின் கறை மகாராஷ்டிரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். அதுவே மக்களின் எண்ணம்.
பிரிட்டிஷார் இந்த நாட்டை ஆக்கிரமித்து ஆட்சி செய்தனர். ஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அவர்களுடைய ஆட்சியின் அடையாளங்கள் அழிக்கப்பட்டன. அதேபோல், கொடுங்கோல் ஆட்சியாளரான ஔரங்கசீப்பின் கறையும் மகாராஷ்டிரத்தில் இருந்து அழிக்கப்பட வேண்டும்.
ஔரங்கசீப்பை புகழ்வது தேசத்துரோகம். அவ்வாறு செய்பவர்களை மகாராஷ்டிரம் மன்னிக்காது. அவரைப் புகழந்த அபு ஆஸ்மி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் சட்டப்பேரவை அமர்வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஔரங்கசீப்பிற்கு ஆதரவாக முன்வரும் எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மேலும், நாக்பூர் தாக்குதல்கள் குறித்துப் பேசிய அவர், “நாக்பூரில் சமூக விரோதிகளின் கோழைத்தனமான தாக்குதலுக்கு எனது கண்டனங்களைததெரிவித்துக் கொள்கிறேன். இரு சமூகங்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நாக்பூரில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க காவல்துறையுடன் மக்களும் ஒத்துழைக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.