ஐபிஎல்லுக்குப் பின் வாழ்க்கையில் முக்கியப் பாடங்களை கற்றுக் கொண்டேன்! -ஹார்திக் பாண்டியா
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பின் வாழ்க்கையில் சில முக்கிய பாடங்களை கற்றுக் கொண்டேன் என்று இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் தங்களது அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வீரர்களும் சில முக்கிய நேர்காணலில் பங்கேற்று கிரிக்கெட் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர். டி20 மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முக்கிய வீரராக இருந்த இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தனியார் தொலைக்காட்சி நடத்திய சிறப்பு பேட்டியில் பேசுகையில், “ஐபிஎல் தொடரில் 11 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். ஒவ்வொரு சீசனும் புதிய ஆற்றலையும், புத்துணர்வையும் தருகிறது.
2024 ஆம் ஆண்டு தொடர் எங்கள் அணிக்கு சவால் மிகுந்ததாகவே இருந்தது. ஆனால், அதிலிருந்து முக்கியப் பாடங்களையும் கற்றுக்கொண்டோம். அந்த அனுபவங்களைக் கண்டறிந்து, 2025 சீசனுக்காக நாங்கள் அணியை உருவாக்க பயன்படுத்தினோம்.
இந்த முறை, மிகவும் அனுபவமுள்ள வீரர்களை தேர்ந்தெடுத்துள்ளோம். இது மிகவும் உற்சாகமாக உள்ளது. தற்போது, எங்களது திட்டங்களைச் செயல்படுத்துவதே முக்கியம். அதில் வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் எங்களுக்கு சில சிறந்த நாள்களாக இருக்குமென்று தோன்றுகிறது.
ஏலத்தைப் பற்றி...
ஐபிஎல் ஏலத்தில் எங்களுக்கு தேவை என்ன என்பதை தெளிவாக அறிந்திருந்தோம். இந்த ஆண்டில், எங்கள் முதன்மை இலக்கு ஒரு வலுவான பந்துவீச்சுத் திறன் கொண்ட அணியை உருவாக்குவதே.
வான்கடே மைதானத்தில் விளையாடுவது ஒரு பெரிய சவால், ஏனெனில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் அதிக ரன்கள் அடிக்கக்கூடிய ஆடுகளமாக இது அமைந்துள்ளது.
இதையும் படிக்க: நியூசி. வீரர் மீது மோதிய பாகிஸ்தான் வீரருக்கு போட்டிக் கட்டணத்தில் 50% அபராதம்!
அதனால், எங்கள் அணியில் வேகம், ஸ்விங் மற்றும் ரீபவுண்ஸ் செய்யக்கூடிய திறமையான பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுத்தோம். ஒட்டுமொத்தமாக, நாங்கள் சமநிலை வாய்ந்த ஒரு அணியை உருவாக்கியிருக்கிறோம். இனி, மைதானத்தில் இறங்கி எங்கள் திறமையை நிரூபிப்பதே முக்கியம்.
ஐபிஎல்லுக்கு வரும் இளம் வீரர்கள் மிகுந்த திறமையுடையவர்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்பும் முக்கியமான விஷயம் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நீங்கள் இங்கே வந்திருப்பதற்குக் காரணம் உங்கள் திறமைதான். ஆனால் இளம் வயதில் அனைவரும் எதிர்கொள்ளும் பெரிய சவால், மனதில் எழும் சந்தேகங்கள்.
என்னைப் பொறுத்தவரை, கிரிக்கெட் களத்தைவிட்டு ஒருபோதும் செல்லாமலிருப்பதே முக்கியம். என் வாழ்க்கையின் சில கட்டங்களில், வெற்றியைவிட முக்கியமானது, அந்த தருணங்களை கடந்து செல்லவேண்டும் என்ற மனப்பான்மைதான்.
உலகக்கோப்பைத் தொடர்
என்னைச் சுற்றி என்ன நடந்தாலும், கிரிக்கெட் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது. அதுவே எனது முன்னேற்றப் பாதையாக அமைந்தது. நான் தொடர்ந்து போராடினேன், கடுமையாக உழைத்தேன். இறுதியில், அந்த உழைப்புக்கு கிடைத்த வெற்றி, நான் நினைத்ததைவிட பெரியதாய் அமைந்தது. உலகக் கோப்பையை வென்றோம். அதன் பிறகு நாடு திரும்பியபோது மக்கள் அளித்த அன்பும் ஆதரவும் எனக்கு ஒரு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தியது.
அந்த காலகட்டத்தில், நம்பிக்கை, நேர்மை, கடின உழைப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து என் முழு திறமையுடன் செயல்பட்டேன். எப்போது இது நடக்கும் என்று தெரியாது. ஆனால் அந்த நம்பிக்கையோடு இருந்தேன். இறுதியாக, விதி எதையோ திட்டமிட்டிருந்தது. இரண்டு மாதக்குள் என் வாழ்க்கையே மாறிவிட்டது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: வெளிநாட்டுத் தொடர்களில் வீரர்களுடன் குடும்பங்கள் பயணிப்பது நல்லது: கபில் தேவ்