12 ஆண்டுகளுக்கு முன் சிறுமியை கட்டாயத் திருமணம் செய்தவர் கைது!
புது தில்லியில் கடந்த 2013 ஆம் ஆண்டு சிறுமியை கட்டாயத் திருமணம் செய்தவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தில்லியின் புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் அனில் (வயது 38), இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் அந்த சிறுமியின் தாயருக்கும் சம்பந்தமுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, அந்த சிறுமி ஷாலிமார் பாக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கடந்த பிப்.25 அன்று தில்லியிலுள்ள குற்றவாளியின் வீட்டில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவரது தாயார் அனில் மும்பை நகரத்துக்கு குடிபெயர்ந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால், அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போலீஸார் அவருக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அரசினால் வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் தில்லிக்கு நேரில் வந்து ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க:சத்தீஸ்கரில் 3 நக்சல்கள் சரண்!
இந்நிலையில், கடந்த மார்ச் 16 அன்று அனில் தில்லி வந்துள்ளதாகவும் அவர் ஹைதர்பூர் பகுதியில் தலைமறைவாகவுள்ளதாகவும் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் அவரது தங்குமிடத்தை சோதனை செய்த காவல் துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம் அந்த சிறுமியின் தாயாரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவர்கள் இருவரின் மீதும் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கிழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.