`அச்சம் தேவையா?' சனிப்பெயர்ச்சி நாளில் சூரியகிரகணம்; ஜோதிடர் சொல்வது என்ன?
நாக்பூர் வன்முறை: 33 போலீஸார் காயம்! 50 பேர் கைது!
நாக்பூர் வன்முறையில் 33 காவல் துறையினர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாக்பூரில் வன்முறை ஏன்?
ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் நாக்பூரில் பதற்றம் நிலவிவருகிறது. விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருந்த போராட்டத்தில் புனித நூல் தீயிட்டு எரிக்கப்பட்டதாக பரவிய தகவலைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பலர் படுகாயம் அடைந்தனர்.
காவல்துறையினர் காயம்
இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியதால், ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கல் வீச்சில் பலர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்த கூடுதல் காவல் படையினர், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர்.
நாக்பூரில் மற்றொரு இடத்திலும் வன்முறை வெடித்ததால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரிகள் 33 பேர் பலத்த காயமடைந்தனர். மூத்த அதிகாரிகளில் ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்தார்.
மார்ச் 17 ஆம் தேதி இரவு நாக்பூரில் வெடித்த இந்த வன்முறை தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்காணிப்புக் கேமரா காட்சிகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் மூலம் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் பணியில் நாக்பூர் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.