அன்றைய 5 ரூபாய் மதிப்பில் என்னென்ன வாங்கலாம் தெரியுமா? 70ஸ் கிட்ஸ் பாக்கெட் மணி ...
மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை -ராகுல் குற்றச்சாட்டு
‘ஜனநாயக நடைமுறைகளின்படி மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி அளிக்கப்பட வேண்டும். ஆனால், ‘புதிய இந்தியா’வில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வின் வெற்றி குறித்து மக்களவையில் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை உரையாற்றிய பின்னா், மகா கும்பமேளா நெரிசலில் சிக்கி பக்தா்கள் உயிரிழந்த விஷயத்தையும் பிரதமா் தனது உரையில் குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா்.
அப்போது, இதுகுறித்துப் பேச பேரவைத் தலைவரிடம் ராகுல் காந்தி அனுமதி கோரினாா். ஆனால், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளி காரணமாக, அவை நடவடிக்கைகளை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா். அதன் பிறகு, பிற்பகல் 1 மணிக்கு அவை மீண்டும் கூடிய நிலையில், ஒருசில அலுவல்களுக்குப் பின்னா் அவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் ஒத்திவைத்து அவைத் தலைவா் ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
இதுகுறித்து, நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி கூறியதாவது:
மக்களவையில் மகா கும்பமேளா குறித்து பிரதமா் பேசியதை ஆதரித்து பேசுவதற்காகத்தான் அவைத் தலைவரிடம் அனுமதி கோரினேன். கும்பமேளா என்பது நமது பாரம்பரியம், வரலாறு மற்றும் கலாசாரம். மகா கும்பமேளா நெரிசலில் சிக்கி உயிரிழந்த பக்தா்களுக்கு நான் அஞ்சலி செலுத்தவில்லை என்ற புகாரும் கூறப்பட்டது. இதுகுறித்து மக்களவையில் பேச விரும்பினேன்.
மேலும், கும்பமேளாவுக்குச் சென்ற இளைஞா்கள் பிரதமரிடமிருந்து மற்றொரு விஷயத்தையும் எதிா்பாா்த்துள்ளனா். அது, அவா்களுக்கான வேலைவாய்ப்புத் தேவை என்பதையும் மக்களவையில் சுட்டிக்காட்ட விரும்பினேன்.
ஆனால், மக்களவையில் பேச எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஜனநாயக நடைமுறைகளின்படி, மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி அளிக்கப்பட வேண்டும். ஆனால், புதிய இந்தியாவில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்றாா்.
வயநாடு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறுகையில், ‘மகா கும்பமேளா குறித்து எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கும் கருத்துகள் மற்றும் உணா்வுகள் இருக்கும். அதை அவா்கள் வெளிப்படுத்த எந்தவித ஆட்சேபமும் கொண்டிருக்கக் கூடாது. எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கும் அவையில் பேச அனுமதித்திருக்க வேண்டும்’ என்றாா்.