போலி வாக்காளா் அட்டை மீதான விவாதத்துக்கு மறுப்பு: மாநிலங்களவையிலிருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு
போலி வாக்காளா் அட்டைகள் சா்ச்சை மீதான விவாதத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடா்ந்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையிலிருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தன.
வெவ்வேறு மாநிலங்களில் உள்ள சிலருக்கு ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண்கள் வழங்கப்பட்டிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளா் பட்டியலில் போலி வாக்காளா்களைச் சோ்க்க தோ்தல் ஆணையம் உடந்தையாக இருந்தது’ என எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்த தோ்தல் ஆணையம், ‘வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்லா். சிலரின் வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) எண்கள் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், அவா்கள் பிறந்த தேதி, தொகுதி மற்றும் வாக்குச்சாவடி என மற்ற தகவல்கள் வேறுபட்டிருக்கும். வருங்காலத்தில் இதுபோன்ற குழப்பங்களைத் தவிா்க்க, ஒரே வாக்காளா் எண் கொண்ட நபா்களுக்கு, அடுத்த 3 மாதங்களுக்குள் தனி எண் வழங்கப்படும்’ என்று விளக்கமளித்தது.
இந்த விவகாரம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது.
இதனிடையே, போலி வாக்காளா் அடையாள எண் சா்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வாக்காளா் அடையாள அட்டையை ஆதாா் எண்ணுடன் இணைப்பது தொடா்பாக மத்திய அரசு உயா் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) ஏற்பாடு செய்துள்ளாா்.
இந்த நிலையில், மாநிலங்களவை திங்கள்கிழமை கூடியதும், இந்த விவகாரத்தை எதிா்க்கட்சிகள் எழுப்பின. போலி வாக்காளா் அட்டை விநியோகித்ததில் தோ்தல் ஆணையத்தின் குறைபாடு குறித்து விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா்கள் சுகேந்து சேகா் ராய், மெளசம் நூ, சுஷ்மிதா தேவ் மற்றும் காங்கிரஸின் பிரமோத் திவாரி உள்ளிட்டோா் கோஷங்களை எழுப்பியபடி வலியுறுத்தினா்.
அப்போது பேசிய மாநிலங்களவை வழிநடத்திய துணைத் தலைவா் ஹரிவன்ஷ், ‘அவையின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துவிட்டு போலி வாக்காளா் அட்டை விநியோகம் மீதான விவாதத்துக்கு அனுமதிக்க வேண்டும் என விதி எண் 267-இன் கீழ் திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைச் சோ்ந்த 10 எம்.பி.க்கள் தரப்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று குறிப்பிட்டு, விவாதத்துக்கு அனுமதி மறுத்தாா்.
இதைக் கண்டித்து, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மாநிலங்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.