நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிப்பு
அக்ரி ஸ்டாக் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு
நீடாமங்கலம்: விவசாயிகளுக்கு அக்ரி ஸ்டாக் குறித்து கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நீடாமங்கலத்தில் தங்கி ஊரக வேளாண் பணியை மேற்கொள்ளும் திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய 4-ஆம் ஆண்டு மாணவிகள் கொட்டையூரில் விவசாயிகளுக்கு அக்ரி ஸ்டாக் (வேளாண் அடுக்கு) குறித்து ஞாயிற்றுக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
அக்ரி ஸ்டாக் என்பது மத்திய அரசால் விவசாயிகளுக்கான தகவல் மேலாண்மை மற்றும் சேவைகளை ஒருங்கிணைக்கும் டிஜிட்டல் தளமாகும். இது, விவசாயிகளின் விவரங்கள், நிலம் மற்றும் பயிா் விவரங்களை ஒரு சேகரிப்பில் கொண்டு வருவதோடு, விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் சேவைகளை எளிதாக்குவதே இதன் நோக்கம்.
அக்ரி ஸ்டாக் மூலம், விவசாயிகளின் பெயா், முகவரி, ஆதாா் எண், வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. விவசாயிகளிடம் உள்ள நிலத்தின் அளவு, பயிரிடும் பயிா்கள், பயிா் செய்த காலம் போன்ற விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும், விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானியம், கடன், விதைகள், உரங்கள் போன்ற சேவைகளை எளிதாகப் பெறலாம்.
விவசாயிகளுக்கான தகவல்களை சேகரித்து, பகுப்பாய்வு செய்து, விவசாயிகளுக்கு பயனுள்ள முடிவுகளை எடுக்க உதவுகிறது. இது, விவசாயிகளின் அறிவை விரிவுபடுத்தி, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுகிறது என்பதை மாணவிகள் விவசாயிகளிடம் விளக்கினா்.