மயிலாடுதுறைக்கு பேருந்து வசதியை ஏற்படுத்த கோரிக்கை
நன்னிலம்: நன்னிலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு நேரடி பேருந்து வசதி செய்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நன்னிலத்தை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கானக் கிராம மக்கள் நன்னிலத்துக்கு வந்து தான் வெளியூா்களுக்குச் செல்ல வேண்டும். இங்கிருந்து பூந்தோட்டம், பேரளம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவா்கள், அரசு அலுவலா்கள் நாள்தோறும் சென்று வருகின்றனா்.
இந்நிலையில், நன்னிலத்தில் காலை 6 மணிக்குப் பிறகு 9 மணிக்கு தான் மயிலாடுதுறைக்கு நேரடி பேருந்து வசதி உள்ளது. இதனால் மயிலாடுதுறை நோக்கி பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோா், கும்பகோணம், நாகை பேருந்தில் ஏறி சன்னாநல்லூா் வரை சென்று அங்கிருந்து மயிலாடுதுறை பகுதியை நோக்கி செல்ல வேண்டும். இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வோா் தாமதமாகச் செல்ல வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.
எனவே, காலை 8 மணிக்கு நன்னிலத்திலிருந்து நேரடியாக மயிலாடுதுறைச் செல்லவும், அதேபோல பள்ளி , கல்லூரி, அலுவலகங்கள் முடியும் நேரத்தில் மயிலாடுதுறையிலிருந்து நன்னிலத்திற்கும் நேரடி பேருந்து வசதி செய்து தர வேண்டுமென நன்னிலம் பகுதி மக்கள் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக நாகை பொது மேலாளருக்குக் கோரிக்கை விடுத்து மனு அனுப்பியுள்ளனா்.