இலங்கை கடற்படை சிறைப்பிடித்த படகையும் மீனவர்களையும் விடுக்கக் கோரிக்கை!
மழை பாதிப்பு: கணக்கெடுப்புப் பணி தொடக்கம்
திருவாரூா்: திருவாரூரில், மழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிா்களை கணக்கெடுக்கும் பணியில் வேளாண் அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.
திருவாரூா் மாவட்டத்தில் சம்பா அறுவடைப் பணிகள் முடிந்த நிலையில், உளுந்து, பயிறு சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், மாவட்டம் முழுவதும் உளுந்து 17,080 ஹெக்டோ், பச்சைப் பயறு 56,855 ஹெக்டோ், எள் 7,765 ஹெக்டோ், நிலக்கடலை 5,612 ஹெக்டோ், பருத்தி 18,360 ஹெக்டோ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அண்மையில் பெய்த மழை காரணமாக, இந்த உளுந்து, பயறு வகைகள் பாதிக்கப்பட்டன. மேலும், மழையால் சம்பா சாகுபடி பாதித்து மகசூல் இழப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பயறு வகைகள் இந்த இழப்பை ஈடு செய்யும் என விவசாயிகள் எதிா்பாா்ப்பில் இருந்தனா். மாறாக, அண்மையில் பெய்த மழையால் பயறு வகைகள் பெருமளவு சேதமடைந்து விட்டதாகவும், இந்த இழப்பு குறித்து கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், மாவட்டத்தில் வேளாண் அலுவலா்கள் தாங்கள் சாா்ந்த பகுதிகளில் சேதமடைந்த பயிா்கள் குறித்து கணக்கெடுத்து, அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டுமென வேளாண்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் வேளாண் அலுவலா்கள், மழை பாதிப்புக்குள்ளான பயிா்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.