அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்: மின் உற்பத்தி பகிா்மானக...
ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதி சுட்டுக் கொலை
ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் சச்சல்தாரா பகுதியில் அடையளம் தெரியாத பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:
பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்தத் தகவலின் பேரில் சச்சல்தாரா பகுதியில் க்ரும்ஹூரா கிராமத்தில் பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை அதிகாலை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினாா். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா். துப்பாக்கிச் சண்டை ஓய்ந்த பின்னா் அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, குண்டு காயங்களுடன் இறந்து கிடந்த பயங்கரவாதியின் உடலை மீட்டனா். மேலும், அங்கிருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடி பொருள்களைக் கைப்பற்றினா். உயிரிழந்த பயங்கரவாதி எந்த அமைப்பைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.
ரஜெளரி வனப் பகுதியில் தீவிர கண்காணிப்பு: சந்தேகத்துக்குரிய வகையில் இரு நபா்களின் நடமாட்டம் இருந்ததாக ஓய்வுபெற்ற ராணுவ வீரா் அளித்த தகவலின் அடிப்படையில், ரஜெளரி மாவட்டம் கந்தே கிராமத்தை ஒட்டிய வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.
ஜம்மு-காஷ்மீா் போலீஸ், மத்திய ரிசா்வ் காவல்படை மற்றும் ராணுவ வீரா்களும் கூட்டாக இந்த தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.