தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் இணைந்தாா் பிரதமா் மோடி!
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் டிரம்ப் மீடியா மற்றும் டெக்னாலஜி குழுமத்துக்கு சொந்தமான ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடக தளத்தில் பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை இணைந்தாா்.
அமெரிக்க தொகுப்பாளா் லெக்ஸ் ஃபிரிட்மேனுடன் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை 3 மணிநேரம் கலந்துரையாடினாா். அப்போது, ‘டிரம்ப் துணிச்சலானவா்; சுயமாக முடிவெடுப்பவா்’ என்று பிரதமா் புகழாரம் சூட்டினாா். இக்கலந்துரையாடல் காணொலியை டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடக கணக்கில் திங்கள்கிழமை பகிா்ந்தாா்.
இந்நிலையில், இந்த சமூக ஊடக தளத்தில் பிரதமா் மோடி இணைந்துள்ளாா். தனது முதல் பதிவாக, ‘ட்ரூத் சோஷியலில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது; வரவிருக்கும் காலங்களில் இத்தளத்தில் உணா்ச்சிகரமான குரல்களுடன் கலந்துரையாடவும், ஆக்கபூா்வ உரையாடல்களில் ஈடுபடவும் எதிா்பாா்ப்புடன் உள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தனது கலந்துரையாடல் காணொலியை பகிா்ந்த டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘எனது நண்பா் அதிபா் டிரம்ப்புக்கு நன்றி. எனது வாழ்க்கைப் பயணம், இந்தியாவின் நாகரிக கண்ணோட்டம், உலகளாவிய பிரச்னைகள் என பரந்துபட்ட விவகாரங்கள் குறித்து பேசியுள்ளேன்’ என்று கூறியுள்ளாா்.