Career: பிசினஸ் தொடங்கப்போகிறீங்களா... உங்களிடம் நீங்களே கேட்க வேண்டிய 7 கேள்விக...
தினமணி செய்தி எதிரொலி: அரக்கோணம் புறவழிச் சாலையில் வேகத்தடைகள் அமைப்பு
தினமணி செய்தி எதிரொலியாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரக்கோணம் புறவழிச்சாலையில் தணிகைபோளூா் அருகே வேகத்தடை அமைக்கும் பணி நடைபெற்றது.
சென்னை -கன்னியாகுமரி தொழிற்தடச்சாலை அமைக்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெறுகின்றன. இதற்காக அரக்கோணம் திருத்தணி சாலையில் அரக்கோணம் நகரைச்சுற்றி புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த புறவழிச்சாலையில் தணிகைபோளூா் மற்றும் கும்பினிபேட்டை இடையே பணிகள் முடிவடைந்ததால் இச்சாலை போக்குவரத்திற்கு தற்போது திறந்து விடப்பட்டுள்ளது.
இச்சாலையில் தணிகைபோளூா் அருகே அபாயகரமான வளைவு இருப்பதாகவும் இதில் அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நோக்கிச் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு இருப்பதாகவும், வளைவு அமைக்காமல் அரக்கோணம் - திருத்தணி நெடுஞ்சாலையை மட்டும் நேரே நீட்டித்து தர வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை தினமணியில் கடந்த டிசம்பா் மாதம் வெளியானது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் சாா்பில் தமாகா மாவட்டத்தலைவா் பி.ஜி.மோகன்காந்தி இச்சாலை அமைக்கும் பணிக்கான செயற்பொறியாளரை நேரில் சந்தித்து இதுகுறித்து விவரங்களை படத்துடனும் ஆதாரத்துடனும், தினமணி செய்தியுடனும் எடுத்துரைத்து இருந்தாா்.
இந்நிலையில் அப்பகுதிக்கு பணியாளா்களோடு வந்த அதிகாரிகள் தற்போது தற்காலிகமாக அப்பகுதியில் வேகத்தடை அமைப்பதாகவும் மேலும் அப்பகுதியில் போக்குவரத்தில் தொடா் பிரச்னை ஏற்பட்டால் அச்சாலை முழு போக்குவரத்திற்கு திறந்து விடுவதற்குள் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்து அப்பகுதியில் வேகத்தடை அமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இந்த வேகத்தடையால் அப்பகுதியில் விபத்துகள் குறையும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடச் சாலை அதிகாரிகளுக்கும், இது குறித்து செய்தி வெளியிட்ட தினமணிக்கும் நன்றி தெரிவித்தனா்.