அசாம், திரிபுராவில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யும் வேதாந்தா குழுமம்!
இந்தியர்கள் தங்கள் ஊதியத்தில் செலுத்தும் இ.எம்.ஐ. எவ்வளவு தெரியுமா?
இந்தியர்கள் தங்கள் ஊதியத்தை எவ்வாறு செலவு செய்கின்றனர், எவ்வளவு தொகையை மாதத் தவணையாக செலுத்துகின்றனர் என புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
சமீபகாலமாக சம்பாதிப்பதற்கு ஏற்ப கடன் வாங்குவதும் மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதற்கு வசதியாக வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் கடன்களை அள்ளிக் கொடுக்கின்றன. வட்டி விகிதம் பாராது பலரும் மாதத் தவணை(இஎம்ஐ) முறையில் கடன் வாங்குகின்றனர்.
இந்நிலையில் புதிய ஆய்வொன்றில் இந்தியர்கள் தாங்கள் சம்பாதிப்பதில் 3-ல் ஒரு பங்கை மாதத் தவணையாக செலுத்துவதாகத் தெரிய வந்துள்ளது. ரூ. 10,000 முதல் ரூ. 1 லட்சம் வரை ஊதியம் பெறுபவர்களிடையே பிடபிள்யுசி மற்றும் பி2பி ஃபின்டெக் நிறுவனங்கள் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளன.
நிதி நிறுவனங்கள் மற்றும் கடனுக்கான பிற டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தும் 30 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியர்கள் தங்கள் சம்பளத்தில் 30-39% தொகையை கடனை திருப்பிச் செலுத்தவே பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊதியத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பது குறித்தும் பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | புகைபிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய்! காரணம் என்ன?
மக்கள் கட்டாயச் செலவுக்காக அதிக அளவு பணத்தைச் செலவிடுகிறார்கள். இது அவர்களின் மொத்த செலவில் 39 சதவீதமாகும். தொடர்ந்து 32 சதவீதத்தை அத்தியாவசியச் செலவுகளுக்காகவும் 29 சதவீதத்தை விருப்பச் செலவுகளுக்கும் பயன்படுத்துகிறார்கள்.
விருப்பச் செலவுகளில் 62 சதவீதத்திற்கும் அதிகமாக 'வாழ்க்கை முறை'க்காக பொருள்களை வாங்குகின்றனர். இதில் ஃபேஷன், தனிப்பட்ட பராமரிப்புப் பொருள்களும் அடங்கும்.
பெருநகரங்களில் வசிப்பவர்கள் பேஷன் உள்ளிட்ட வாழ்க்கை முறை சார்ந்த பொருள்கள் வாங்க அதிகம் செலவிடுகின்றனர்.
அதேபோல, ஆரம்ப நிலை வருமானம் ஈட்டுபவர்களைவிட அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அதிகமாக செலவு செய்கின்றனர்.
உணவு ஆன்லைனில் ஆர்டர் செய்தல் அல்லது வெளியே சென்று ஹோட்டல்களில் சாப்பிடுதல் என உணவுக்கான செலவு இந்தியர்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஒருவரின் சம்பளம் அதிகரிக்கும்போது அவரது செலவுகளும் இரு மடங்கு அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது.
குறைந்த வருமானம் பெறுபவர்கள், வங்கியைக் காட்டிலும் நண்பர்கள், உறவினர்கள், வட்டிக்கு கடன் பெறுவது, அடகுக் கடைகளில் நகைகளை வைத்து கடன் பெறுகிறார்கள்.
இரண்டாம் நிலை நகரங்களில் வீட்டு வாடகைக்கு செலவிடப்படும் சராசரி மொத்தத் தொகை, முதல் நிலை நகரங்களைவிட 4.5 சதவீதம் அதிகமாகும். அதேபோல இரண்டாம் நிலை நகரங்களில் உள்ளவர்களே மருத்துவத்துக்கு அதிகம் செலவு செய்கின்றனர்.
ஆரம்பநிலை பணியாளர்கள் தங்களது ஊதியத்தில் 34%, வளரும் தொழில் வல்லுநர்கள் 35%, வளர்ந்த நிலையில் உள்ளவர்கள் 40%, நடுத்தர வருமானம் உடையவர்கள் 44%, அதிக வருமானம் பெறுபவர்கள் 46% தொகையையும் மாதத் தவணையாக செலுத்துவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.