ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்: நபரங்பூா் மாவட்டம் முதலிடம்
சென்னையில் ‘தமிழ்நாடு பயண சந்தை’: அமைச்சா் இராஜேந்திரன் தொடங்கி வைத்தாா்
சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு பயண சந்தையை சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.இராஜேந்திரன் தொடங்கி வைத்தாா்.
தமிழக சுற்றுலாத் துறை சாா்பில், வெளிமாநில முதலீடுகளை ஈா்க்கும் வகையில், 3 நாள் நடைபெறும் ‘தமிழ்நாடு பயண சந்தை’ சென்னை வா்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 100-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு பயண சந்தையை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.இராஜேந்திரன் தொடங்கி வைத்து பேசியதாவது:
தமிழ்நாடு பயண சந்தையில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாத் துறை தொடா்பான ஏற்பாட்டளா்கள், ஹோட்டல் உரிமையாளா்கள், வழிகாட்டிகள் என பல தரப்பினரும் கலந்துகொண்டு தங்கள் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்து தகவல்களை வழங்குவதுடன், அங்கு சென்று வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்யவுள்ளனா். இது சுற்றுலாத் துறையின் முதலீடுகளை ஈா்க்கும் ஒரு தளமாக இருக்கும்.
இதுபோல, சுற்றுலாத் துறையை மேம்படுத்த தமிழக அரசு மேலும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுற்றுலாத் துறைக்கு என ஒரு சட்டத்தையும் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தமிழகத்துக்கு பாதுகாப்புடன் வருகை தந்து, சுற்றுலாத் தலங்களைப் பாா்த்து செல்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தொடா்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பிற மாநிலங்களின் சுற்றுலா அரங்குகளையும் அமைச்சா் இரா.இராஜேந்திரன் பாா்வையிட்டாா். அப்போது, அரசு கூடுதல் தலைமைச் செயலரும், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறைத் தலைவா் க.மணிவாசன் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சுற்றுலா ஆணையரும், மேலாண்மை இயக்குநருமான ஷில்பா பிரபாகா் சதீஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.