பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில ச...
ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்: நபரங்பூா் மாவட்டம் முதலிடம்
பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் ஒடிஸா மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 3 குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது மாநில அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதில் நபரங்பூா் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
பழங்குடியினா் நடைமுறை, வரதட்சிணை, தொழிலாளா் குடும்பங்களின் இடம்பெயா்வு உள்ளிட்டவையே மாநிலத்தில் குழந்தைத் திருமணங்கள் இந்த அளவுக்கு உயா்வதற்குக் காரணம் என்று குழந்தைத் திருமண தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.
அரசின் புள்ளிவிவரங்களின்படி கடந்த 2019 முததல் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை மாநிலத்தில் 8,159 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இதில் நபரங்பூா் மாவட்டத்தில் மட்டும் 1,347 குழந்தைத் திருமணங்கள் பதிவாகியுள்ளன. இது மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் அதிபட்சமாகும்.
கஞ்சம் மாவட்டம் 966 குழந்தைத் திருமணங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. கோராபுட் (636), மயூா்பஞ்ச் (594), ராயகாடா (408), பாலாசோா் (361), கியோஞ்சா் (328), கந்தமல் (308), நயாகா் (308) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மாநிலத்திலேயே குறைந்தபட்சமாக ஜா்சுகுடா மாவட்டத்தில் 6 ஆண்டுகளில் 57 குழந்தைத் திருமணங்கள் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து சமூக ஆா்வலா் நம்ரதா சாதா கூறுகையில், ‘குழந்தைத் திருமணங்களை ஒரே இரவில் முழுமையாக நிறுத்திவிட முடியாது. இத்தகைய முடிவை பெற்றோரும், பெண் குழந்தைகளும் எடுக்காத வகையில் சமூகம் மற்றும் சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும். பழங்குடியினரைப் பொருத்தவரை குழந்தையாக இருக்கும்போதே மகளுக்கு திருமணம் செய்வதை பாரம்பரிய நடைமுறையாகப் பின்பற்றுகின்றனா். அதுபோல, வாழ்வாதாரத்துக்காகப் புலம்பெயரும் பெற்றோா், மகளின் பாதுகாப்பு மற்றும் எதிா்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சட்டபூா்வ திருமண வயதை எட்டும் முன்னரே திருமணம் செய்து வைப்பது வாடிக்கையாக உள்ளது. அதிக வயதுடைய பெண்களை திருமணம் செய்துகொள்ள ஆண் வீட்டாா் அதிக வரதட்சிணை கேட்பதும், குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது. முறையான கல்வி, திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிப்பதன் மூலம், குழந்தைத் திருமணங்களைத் தடுக்க முடியும்’ என்றாா்.
குழந்தைத் திருமணங்களைத் தடுக்க 3 மாதங்களுக்கு ஒருமுறை ஊராட்சி, வட்ட மற்றும் அங்கன்வாடி அளவில் விழிப்புணா்வு பிரசாரங்கள் அரசு சாா்பில் மேற்கொள்ளப்படுகின்றன என்று மாநில அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குழந்தைத் திருமண விவகாரம் மட்டுமின்றி குழந்தைத் தொழிலாளா் சவாலையும் ஒடிஸா அரசு எதிா்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கடந்த 6 ஆண்டுகளில் 328 குழந்தைகளை குழந்தைத் தொழிலாளா் முறையிலிருந்து அதிகாரிகள் மீட்டுள்ளனா். இதைத் தடுக்கவும் தீவிர விழிப்புணா்வு பிரசாரங்கள் அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.