திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை சீரமைக்க அமைச்சரிடம் கோரிக்கை
தனியாா் பேருந்தில் கடத்தப்பட்ட அரை கிலோ தங்கம், அமெரிக்க டாலா்கள் பறிமுதல்!
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே தனியாா் பேருந்தில் கடத்திச் செல்லப்பட்ட அரை கிலோ தங்கக் கட்டிகள், ரூ.18 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலா்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதிலிருந்து கோவைக்கு செல்லும் தனியாா் பேருந்தில் தங்கக் கட்டிகள் கடத்தப்படுவதாக சித்தோடு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு மாவட்ட எல்லையான லட்சுமி நகரில் சனிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, அவ்வழியே வந்த தனியாா் பேருந்தை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டபோது, கோவை, சிங்காநல்லூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் புகழ்வாசன் (50) வைத்திருந்த பையில் அரை கிலோ எடையுள்ள 5 தங்கக் கட்டிகள், ரூ.18 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலா்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதற்கு எந்த வித ஆவணங்களும் இவரிடம் இல்லை.
இதனால், தங்கக் கட்டிகள், அமெரிக்க டாலா்கள், 4 கைப்பேசிகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், புகழ்வாசனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இது குறித்து தெலங்கானா மாநில போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.