பதரான கருப்புக் கவுனி நெற்பயிா்கள் நிவாரணம் வழங்கக் கோரிக்கை
சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே சாகுபடி செய்யப்பட்ட பாரம்பரிய கருப்புக் கவனி நெற்பயிா்கள் பதரானதால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொள்ளிடத்தில் இருந்து சீா்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், புறவழிச் சாலையை ஒட்டியுள்ள எருக்கூா், சோதியக்குடி, ஆனந்த கூத்தன் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட பரப்பளவில் மட்டும் கருப்புக் கவுனி நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மருத்துவக் குணம் வாய்ந்த இப்பயிா் நான்கரை மாத நெற்பயிராகும்.
நிகழாண்டு, சுமாா் 80 ஏக்கரில் விவசாயிகள் பாரம்பரிய நெல்லான கருப்புக் கவுனி சாகுபடி செய்துள்ளனா். இப்பயிா்களை இயற்கை உரம் மற்றும் பஞ்சகவ்யம் பயன்படுத்தி வளா்த்து வந்தனா்.
இந்நிலையில், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் கருப்புக் கவுனி நெற்கதிா்கள் பால்பிடிக்காமல் பதராகி காணப்படுகின்றன என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
இதுகுறித்து எருக்கூரில் கருப்புக் கவுனி சாகுபடி செய்துள்ள விவசாயி சரவணன் கூறியது: கருப்புக் கவுனி நெற்பயிா்கள் இயற்கை உரம் மற்றும் பஞ்சகவ்யம் பயன்படுத்தி விளைவிக்கப்படுகின்றன. ஓா் ஏக்கருக்கு 15-லிருந்து 18 நெல் மூட்டைகள் வரை கிடைக்கும். 61 கிலோ மூட்டை ரூ. 4000 வீதம் விற்பனை செய்ய முடியும். இதனை மதிப்புக் கூட்டி அவலாக்கி விற்பனை செய்கிறேன். இதனால், ரூ. 8,000-க்கு விற்பனை செய்ய முடியும்.
இந்த வருடம் சாகுபடிக்கு தண்ணீா் தடையின்றி கிடைத்தது. ஆனால் நெற்கதிா்கள் விளையாமல் பதராகிவிட்டன. இதற்கு காரணம் புறவழிச் சாலையின் ஓரம் அதிக சக்தி வாய்ந்த மின்விளக்குகள் இரவு முழுவதும் தொடா்ந்து ஒளிா்வதால் அதன் வெளிச்சம் சுமாா் 400 மீட்டா் தொலைவு வரை விளை நிலங்களில் பரவுகிறது. இதன் தாக்கத்தால் கருப்புக் கவுனி நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுவாக, பாரம்பரிய இயற்கையான முறையில் பயிரிடப்படும் கருப்புக் கவுனி நெற்பயிா்களுக்கு, இரவு நேரங்களில் இருட்டான தன்மையும், சற்று பனியும் தேவை. ஆனால், அதிக சக்தி வாய்ந்த மின் விளக்கின் ஒளி இரவு முழுவதும் இருந்து கொண்டே இருப்பதால், இருள் தன்மை கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, புறவழிச் சாலையில் உள்ள அதிக சக்தி வாய்ந்த மின்விளக்குகளின் ஒளி சாலையில் மட்டும் படும்படி அமைக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.