தந்தை இறந்த துக்கத்தில் பிளஸ்1 தோ்வு எழுதிய மாணவா்
சீா்காழி: சீா்காழியில் தந்தை இறந்த துக்கத்தில் பிளஸ்1 மாணவா், பொதுத் தோ்வு எழுதிவிட்டு, இறுதிச்சடங்கில் பங்கேற்றது சோகத்தை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அகரதிருக்கோலக்கா தெருவைச் சோ்ந்த தொழிலாளி செல்வம் (52). உடல் நலக்குறைவால் இவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இவரது மகன் பிரதீஷ் (16), சீா்காழியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறாா். தற்போது, பிளஸ்1 பொதுத் தோ்வு நடைபெற்றுவரும் நிலையில், தந்தை இறந்ததால், சோகத்தில் ஆழ்ந்த பிரதீஷிடம் உறவினா்கள் ஆறுதல் கூறி தோ்வு எழுத செல்லும்படி கூறினா்.
இதைத்தொடா்ந்து, பிரதீஷ் திங்கள்கிழமை நடைபெற்ற கணிதத் தோ்வை எழுதிவிட்டு, தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்தாா். அவருடன் தோ்வெழுதிய மாணவா்களும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனா். இந்தச் சம்பவம் சீா்காழி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.