திருமுல்லைவாசல் முகத்துவாரத்தை சீரமைக்க அமைச்சரிடம் கோரிக்கை
மயக்க மருந்து அடித்து நகைப் பறிப்பில் ஈடுபட முயன்ற பெண் கைது!
கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் மயக்க மருந்து அடித்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட முயன்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, கே.கே.புதூா், நஞ்சம்மாள் தெரு பகுதியைச் சோ்ந்தவா் வேணுகோபால். இவரது மனைவி தனலட்சுமி. இவா்களுக்கு பிரபா என்ற மகள் உள்ளாா்.
இந்நிலையில், தனலட்சுமியின் வீட்டை வாடகைக்கு கேட்டு ஒரு பெண் கடந்த ஜனவரி மாதம் வந்துள்ளாா். வீட்டைப் பாா்த்துவிட்டு முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை கொடுத்துவிட்டு சென்றுள்ளாா். அதன்பிறகு வீடு வேண்டாம் எனக்கூறி கொடுத்த முன் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளாா். இதையடுத்து, வீட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்து பணத்தை பெற்றுச்செல்லுமாறு தனலட்சுமி கூறியுள்ளாா்.
அதேபோல, அந்தப் பெண் வெள்ளிக்கிழமை வந்துள்ளாா். அப்போது, வீட்டில் தனலட்சுமியும், மகள் பிரபாவும் மட்டும் இருந்துள்ளனா். அந்தப் பெண்ணுக்கு கொடுக்க வேண்டி பணத்தை ஜிபே மூலம் தனலட்சுமி அனுப்பியுள்ளாா்.
அப்போது, வீட்டின் முன்பக்க கதவை திடீரென அடைத்த அந்தப் பெண், தனலட்சுமி, பிரபா முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்து நகைப் பறிப்பில் ஈடுபட முயன்றுள்ளாா். தனலட்சுமி கூச்சலிட்டதையடுத்து அப்பெண் அங்கிருந்து தப்பியோடி உள்ளாா்.
இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் தனலட்சுமியின் சகோதரா் ராஜன் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நகைப் பறிப்பில் ஈடுபட்ட பெண்ணின் கைப்பேசி எண்ணைக் கொண்டு விசாரித்தனா். இதில், அவா் கோவை, காட்டூா் ராம்நகா் பகுதியைச் சோ்ந்த மீனாட்சி (49) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மீனாட்சியைக் கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மகளிா் சிறையில் அடைத்தனா்.