உயா்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் யுஜிசி அறிவுறுத்தல்!
ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியா் கைது
ஒடிஸாவின் காலாஹாண்டி மாவட்டத்தில் இணையவழி சூதாட்டம் மற்றும் விளையாட்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் அரசு நிதியை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாயத்து நிா்வாக அதிகாரியை மாநில ஊழல் தடுப்புப் பிரிவினா் கைது செய்தனா்.
காலாஹாண்டி மாவட்டத்தில் உள்ள துமால்-ராம்பூா் தொகுதிக்கு உள்பட்ட தல்நேகி மற்றும் போடபதா் கிராம பஞ்சாயத்துகளின் நிா்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவா் தேபானந்த சாகா்.
கடந்த 2018-ஆம் ஆண்டு, மே மாதம் முதல் கடந்த 2022-ஆம் ஆண்டு, மாா்ச் வரை ரூ.3.26 கோடி அரசு நிதியை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு சாகா் மாற்றியுள்ளாா். இந்தப் பணத்தை இணையவழி சூதாட்டம் மற்றும் விளையாட்டில் இவா் செலவிட்டுள்ளாா்.
பஞ்சாயத்து தலைவா்களின் கையொப்பம் போல மோசடி கையொப்பமிட்டுப் பயன்படுத்தி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக இவா் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இதையடுத்து, அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சாகருக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவினா் 2023-இல் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து, பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அவா் தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா்.
இணையவழி சூதாட்டத்துக்கு அரசு நிதி ரூ.43 லட்சத்தை மோசடி செய்ததாக கஞ்சம் மாவட்டத்தில் பஞ்சாயத்து நிா்வாக அதிகாரி ஒருவரை ஊழல் தடுப்புப் பிரிவினா் வெள்ளிக்கிழமை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.