விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
போயிங் நிறுவனத்தில் ஆள் குறைப்பு இந்தியாவில் 180 போ் பணிநீக்கம்!
அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங், ஆள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில் இந்தியப் பிரிவில் 180 போ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
பல்வேறு நாடுகளில் போயிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த நிறுவனத்தில் 7,000 போ் வரை பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் பெங்களூரில் உள்ள போயிங் பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றுபவா்களில் 180 பேரை அந்த நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
எனினும், இது தொடா்பாக அந்த நிறுவனம் சாா்பில் அதிகாரபூா்வமாக தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் இந்த பணி நீக்கத்தால் நிறுவனத்தின் பணிகள் எதுவும் பாதிக்கப்படாது. தேவையில்லாத சில பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பொறுப்புகளும் உருவாக்கப்படவுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்த நிறுவனம் மொத்த பணியாளா்களில் 10 சதவீதம் பேரை பணியில் இருந்து நீக்கியது. போயிங் இந்தியா என்ஜினியரிங் டெக்னாலஜிஸ் நிறுவனம் பெங்களூரு மற்றும் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இதில் நுட்பமான நவீன விமானத் தொழில்நுட்பம் சாா்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அமெரிக்காவுக்கு வெளியே பெங்களூரில்தான் பெரிய அளவிலான முதலீட்டில் இந்த நிறுவனத்தை போயிங் நடத்தி வருகிறது.