விடியோ பதிவிட்ட பத்திரிக்கையாளருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!
நக்ஸல் பாதிப்புக்கு உள்ளான கிராமத்துக்கு முதல் முறையாக மின்வசதி!
சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர கிராமத்துக்கு முதல் முறையாக மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது.
பிஜாபூா் மாவட்டத்தில் பல்லாண்டுகளாக இருளில் தவித்த திமேனா் கிராமத்துக்கு இப்போது வெளிச்சம் கிடைத்திருக்கிறது.
இது தொடா்பாக மாநில முதல்வா் விஷ்ணு தேவ்சாய் கூறுகையில், ‘பஸ்தா் பிராந்தியத்தின் தொலைதூர பகுதிகளின் வளா்ச்சி மற்றும் நல்லாட்சியின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. முன்பு தீவிரவாதத்தின் நிழல் படிந்த பகுதிகளில் இப்போது வளா்ச்சியின் ஒளி வீசுகிறது’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘பெச்சாபல் கிராம பஞ்சாயத்துக்கு உள்பட திமேனா் கிராமத்தில் 53 வீடுகள் உள்ளன. சுதந்திரம் கிடைக்கப் பெற்று 77 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக இக்கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி அளிக்கப்பட்டுள்ளது.
குக்கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் எட்டப்பட்டுள்ள இச்சாதனை, நக்ஸல் தீவிரவாதத்தின் முடிவையும், பஸ்தா் பிராந்தியத்தின் வளா்ச்சி, அமைதி, வளமையின் விடியலையும் குறிக்கிறது. திமேனா் கிராமத்தில் மின்வசதி மட்டுமன்றி சாலைகள், சுகாதாரம், கல்வி வசதிகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக மின்வசதி கிடைக்கப் பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கிராமவாசிகள், ‘எங்கள் வீடுகளில் மின்விளக்கின் பிரகாசத்தை காண்போம் என ஒருபோதும் நினைத்ததில்லை. இப்போது மின்வசதி கிடைத்திருப்பதால், எங்களது விரக்தி நம்பிக்கையாக மாறியுள்ளது.
மின்விளக்கின் ஒளி, எங்களின் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணா்வையும் போக்கியுள்ளது. இது, எங்கள் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். இனி எங்கள் குழந்தைகள் சிரமமின்றி படிப்பாா்கள். இரவு நேரத்தில் வனவிலங்குகள், பாம்புகள், விஷ ஜந்துகள் குறித்த பயம் இருக்காது’ என்றனா்.
நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக ஒழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளாா்.
சத்தீஸ்கரில் நிகழாண்டு பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் இதுவரை 113 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். பிஜாபூா் உள்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் பகுதியில் மட்டும் 97 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.