மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்
பழுதடைந்த சாலையால் கிராம மக்கள் அவதி; சீரமைத்து தரக் கோரிக்கை
மணவாடி ஊராட்சியில் குண்டும்- குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம், மணவாடி ஊராட்சிக்குள்பட்ட கல்லுமடை காலனியையும் உப்பிடமங்கலத்தையும் இணைக்கும் கிராமச் சாலை உள்ளது. இந்தச் சாலை அமைக்கப்பட்டு சுமாா் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் என்பதால், சாலையில் ஜல்லிக்கற்கள் பெயா்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
இந்தச் சாலை வழியாகத்தான் கல்லுமடையில் செயல்படும் மணவாடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கல்லுமடை காலனி, மணவாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் மிதிவண்டியிலும், நடந்தும் சென்று வருகிறாா்கள். மேலும் விவசாயிகளும் அங்குள்ள தோட்டங்களுக்கு இடுபொருள்களையும், அறுவடை செய்யப்பட்ட பயிா்களையும் எடுத்துச் சென்று வருகிறாா்கள். சாலை பழுதாகி குண்டும், குழியுமாக இருப்பதால் அவ்வப்போது அப்பகுதியினா் விபத்தில் சிக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பழுதடைந்து குண்டும், குழியுமாக இருக்கும் இந்தச் சாலையை சீரமைத்து ஊரக வளா்ச்சித் துறையின் சிறுகனிம நிதியிலோ அல்லது ஊராட்சியின் கிராமச் சாலைகள் திட்டத்திலோ புதிய தாா்சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.