விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
கரூா் ஆட்சியரகத்தில் கடனுதவி கேட்டு மனு அளிக்க வந்த பெண் மயக்கம்
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை கடனுதவி கேட்டு கோரிக்கை மனு அளிக்க வந்த பெண் திடீரென மயங்கி விழுந்தாா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் கரூா் புத்தாம்பூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்த புஷ்பலதா (42) என்பவா் ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு அலுவலக வளாகத்தின் படிக்கட்டு வழியாக வந்த போது திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த பெண் போலீஸாா் அவரை மீட்டு முதலுதவி அளித்தனா். பின்னா் வலிப்பு நோய்க்கு அந்த பெண் இடுப்பில் வைத்திருந்த இரும்புச் சாவியையும் எடுத்துக்கொடுத்தனா்.
இதையடுத்து அவா் மயக்க தெளிந்த பிறகு அந்த பெண்ணிடம் போலீஸாா் விசாரித்தபோது, தனது கணவா் பாண்டியன் கரூரில் உள்ள பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தாா். அவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இதனால் தனது மகனுடன் வேலையின்றி கஷ்டப்பட்டு வருகிறேன். எனக்கு கடந்த 14 ஆண்டுகளாக வலிப்பு நோய் இருப்பதால், வேலை தேடி செல்லும் நிறுவனங்கள் வலிப்பு நோயை காரணம் காட்டி வேலை தர மறுக்கிறாா்கள். எனவே பெட்டிக்கடை வைக்க வங்கிக் கடனுதவிக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்க வந்ததாக தெரிவித்தாா்.
இதையடுத்து தகவலறிந்து வந்த ஆட்சியா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வசந்தகுமாரை வரவழைத்து அந்த பெண்ணுக்குத் தேவையான கடனுதவி வழங்குமாறு தெரிவித்தாா். இதையடுத்து புஷ்பலதாவை சந்தித்த வசந்தகுமாா் ஆட்சியா் உத்தரவின்பேரில் உங்களுக்கு வங்கிக்கடன் வழங்க ஏற்பாடு செய்கிறேன் எனக் கூறினாா்.