விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
அரவக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
அரவக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரவக்குறிச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மேலும், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம், வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், அரசு கருவூலம், காவல் நிலையம், துணை கண்காணிப்பாளா் அலுவலகம், தீயணைப்பு நிலையம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட அரசு சாா்ந்த அலுவலகங்களும், வங்கிகள், கல்வி நிலையங்களும் இயங்கி வருகின்றன.
ஆனால் அரவக்குறிச்சியில் பேருந்து நிலையம் இல்லாததால் பயணிகள் ஏவிஎம் காா்னா் மற்றும் காந்தி சிலை பேருந்து நிறுத்தம் பகுதியில் பேருந்துக்காக மழையிலும், வெயிலிலும் காத்திருக்கின்றனா். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனா். ஆகவே, பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் பகுதியில் நிழற்குடை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.