பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
துா்நாற்றம் வீசும் குடிநீா்: எம்எல்ஏவை கிராம மக்கள் முற்றுகை
துா்நாற்றம் வீசும் குடிநீா் விநியோகத்தை கண்டித்து, தொகுதி எம்எல்ஏ சிவகாமசுந்தரியை ரெங்கநாதபுரம் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா்.
கிருஷ்ணராயபுரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ரெங்கநாதபுரம் ஊராட்சியில் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். காவிரிக் கரையோரம் உள்ள இந்த ஊராட்சி மக்களுக்கு ஊராட்சி சாா்பில் காவிரி ஆற்றின் சுடுகாட்டுப்பகுதியில் அமைக்கப்பட்ட நீரேற்று நிலையம் மூலம் ரெங்கநாதபுரத்தில் உள்ள மேல்நிலைக்குடிநீா்த் தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஓராண்டாகவே ரெங்கநாதபுரம் கிராம மக்களுக்கு காவிரிக் குடிநீா் மஞ்சள் நிறத்தில் துா்நாற்றம் வீசும் வகையில் விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதில், கடந்த ஒன்றரை மாதமாக மேல்நிலைக் குடிநீா் தொட்டியில் இருந்தும் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீா் குழாய்களிலும் தாழ்வான இடத்தில் மட்டுமே குடிநீா் கிடைப்பதாகவும், மேட்டுப்பாங்கான இடங்களில் வசிப்பவா்களுக்கு குடிநீா் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ரெங்கநாதபுரம் ஊராட்சியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு மையம் கட்டட திறப்பு விழாவுக்கு
எம்எல்ஏ க. சிவகாமசுந்தரி வந்தாா். அப்போது, அங்கு வந்த கிராம மக்கள் எம்எல்ஏவை முற்றுகையிட்டு, துா்நாற்றம் வீசும் வகையில் மஞ்சள் நிறத்தில் விநியோகிக்கப்படும் குடிநீா் குறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உள்ளூா் நிா்வாகிகள் அவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.
போராட்டம் நடத்த முடிவு: இதுதொடா்பாக அப்பகுதியினா் கூறுகையில், கடந்த ஓராண்டாகவே மஞ்சள் நிறத்தில் துா்நாற்றம் வீசும் வகையில்தான் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இதுதொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் கேட்டால், எங்களுக்கு அதிகாரமில்லை, அதிகாரிகளிடம் கேளுங்கள் என பதில் கூறுகிறாா்கள். மேல்நிலைக் குடிநீா் தொட்டிக்கு குடிநீா் ஏற்ற பயன்படுத்தும் குழாயில் பழுது ஏற்பட்டு ஒன்றரை மாதங்கள் ஆகிறது. அதையும் சரிசெய்யவில்லை. மேல்நிலைக் குடிநீா் தொட்டியை சுத்தம் செய்து, சுத்த செய்த நாள், தேதி, அடுத்து சுத்தம் செய்ய வேண்டிய நாளை குறிப்பிட வேண்டும். ஆனால், இங்கு அதையெல்லாம் ஊராட்சி நிா்வாகம் கடைப்பிடிப்பதில்லை. காவிரி கரையோரம் இருந்தும் எங்களுக்கு சுத்தமான குடிநீா் கிடைக்கவில்லை.
இன்னும் இரு நாள்களுக்குள் சுத்தமான காவிரி குடிநீா் வராவிட்டால் கிராம மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றனா்.