விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
பெண் கொலை வழக்கில் மேல்முறையீடு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை!
கரூா் அருகே பெண்ணைக் கொலை செய்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கோவை மாவட்டம், சிங்காநல்லூா் அகிலாண்டபுரத்தைச் சோ்ந்தவா் நடராஜ் (58). இவா், கடந்த 2017-ஆம் ஆண்டு கரூா் மாவட்டம் தென்னிலை அடுத்த காா்வழியில் தங்கி விவசாயக் கூலி வேலை செய்தபோது அங்கு பணியாற்றிய பொன்னம்மாள் என்கிற தனலட்சுமியுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று நடராஜிக்கும், தனலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நடராஜ், தனலட்சுமியை கொலை செய்து அங்குள்ள வாய்க்காலில் சடலத்தை வீசிவிட்டுச் சென்றுள்ளாா். இதுதொடா்பாக தென்னிலை போலீஸாா் வழக்குப்பதிந்து நடராஜை கைது செய்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் 2018-இல் வழக்குத்தொடா்ந்தனா்.
இந்நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் நடராஜை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீது திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையில் குற்றவாளி நடராஜிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தீா்ப்பு வழங்கியது. இதையடுத்து நடராஜ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.