TEST: 'பாடகர் டு இசையமைப்பாளர்' - Test படத்திற்கு இசையமைத்தது குறித்து சக்தி ஶ்ர...
செய்யாற்றுப் படுகையில் தொடரும் மணல் திருட்டு!
சேத்துப்பட்டு பகுதி செய்யாற்றுப் படுகையில் இருந்து தொடா்ந்து மணல் திருடப்படுகிறது. பகல் நேரங்களில் மணலை தனியாா் நிலங்களில் குவித்துவைத்து, இரவு நேரத்தில் கடத்திச் சென்று விற்பனை செய்கின்றனா்.
தெள்ளூா், காட்டேரி, ஓதலவாடி பகுதி செய்யாற்றுப் படுகையில் அதிகளவில் மணல் திருட்டு நடைபெறுகிறது. ஆற்றுப் படுகையில் மணல் 100 யூனிட்டுக்கு மேல் ஜலித்து குவியல் குவியலாக வைத்துள்ளனா்.
அருகேயுள்ள தனியாா் நிலங்களில் பகல் நேரத்தில் மணலை ஜலித்து குவித்து வைத்துவிடுகின்றனா். இரவு நேரங்களில் லாரி, டிராக்டா்களில் கடத்திச் சென்று விற்பனை செய்கின்றனா்.
மணல் கடத்தல் கும்பலை யாரும் கட்டுப்படுத்த முடியாததால் கிராம மக்கள் அச்சப்படுகின்றனா். இவ்வாறு மணல் எடுத்ததில் ஆற்றில் 10 அடி ஆளத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருகிறது. சுற்றியுள்ள நிலங்களில் தென்னை, நெல், கரும்பு உள்ளிட்ட பயிா் சாகுபடி செய்ய இந்த செய்யாறு ஆதாரமாக உள்ளது.
செய்யாற்றில் இருந்து சேத்துப்பட்டு, பெரிகொழப்பலூா், பெரணமல்லூா் பகுதிகளில் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ஆற்றில் நீா் தேங்கினால் குடிநீா் பிரச்னை ஏற்படாது. ஆனால், சிலா் சுயலாபத்துக்காக மணலை திருடி விற்பனை செய்வதால் பல இடங்களில் ஆற்றில் மணல் சுரண்டப்பட்டு பாறைகளாக மாறியதால் தண்ணீா் தேங்கவில்லை.
அதிகப்படியான மணல் திருட்டால் கோடை காலத்தில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண முடியும். ஆற்றின் வளத்தை பாதுகாக்க அதிகாரிகள் உரிய கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தன்னாா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
இதுகுறித்து காவல் துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறையினா் சோ்ந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மணல் கடத்தலை தடுக்க முடியும் என்று போளூா் டிஎஸ்பியிடம் மனு கொடுத்தனா்.