உலக தண்ணீா் தினம்: கிராம சபைக் கூட்டம் ஒத்திவைப்பு
உலக தண்ணீா் தினத்தை (மாா்ச் 22) முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த கிராம சபைக் கூட்டம் வருகிற 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் வருகிற 23-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நிா்வாகக் காரணங்களால் இந்தக் கூட்டம் வருகிற 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருள் குறித்தும், கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்படும் என்றாா் அவா்.