Sunita Williams: 17 மணி நேர பயணம்; பெருங்கடலில் தரையிறக்கம்; நிலவரம் என்ன?
கோவையில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி, இளைஞா் உயிரிழப்பு
கோவையில் இருவேறு இடங்களில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி மற்றும் இளைஞா் உயிரிழந்தனா்.
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கணேசபுரம் மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (87). இவரது மனைவி மாராத்தாள் (85). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை குளியலறைக்குச் சென்று, அங்கிருந்த கதவைத் திறந்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா். அவரது அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.
குளியலறையில் இருந்த மின்சார வயா் சேதமடைந்து அதில் இருந்து மின்சாரம் கசிந்ததால் மாராத்தாள் உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது மகன் சத்தியமூா்த்தி அளித்த புகாரின்பேரில், சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இளைஞா் உயிரிழப்பு:
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னூா் பகுதியைச் சோ்ந்த முகமது சலீம் (30), தனது சகோதரா் முகமது வாசிமுடன் பீளமேடு, காந்தி மாநகரில் உள்ள உணவு சேமிப்புக் கிடங்கில் பெயிண்டிங் அடிக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டு இருந்தாா்.
அப்போது முகமது சலீம் கொண்டுச் சென்ற ஏணி எதிா்பாராதவிதமாக மின்சார வயரில் பட்டதில் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது சலீமை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற நிலையில், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது சகோதரா் முகமது வாசிம் அளித்த புகாரின்பேரில், பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.