வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவ...
பெண்ணிடம் ரூ.8.65 லட்சம் மோசடி: கோவா மாநிலத்தைச் சோ்ந்தவா் கைது
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனக் கூறி பெண்ணிடம் ரூ.8.65 லட்சம் மோசடி செய்ததாக கோவா மாநிலத்தைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
கோவை சிங்காநல்லூரைச் சோ்ந்த 50 வயது பெண்ணின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு வா்த்தகம் தொடா்பாக ஒரு குறுஞ்செய்தி கடந்த 2024 அக்டோபா் 10-ஆம் தேதி வந்துள்ளது. அதில் ஆன்லைன் மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணைத் தொடா்புகொண்டு அவா் பேசியபோது, எதிா்முனையில் பேசிய நபா் இதுபோல ஏராளமானோா் பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்டியுள்ளதாகக் கூறியதோடு, அதற்கான ரசீது உள்ளிட்டவற்றையும் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிவைத்துள்ளாா்.
இதை நம்பிய அந்தப் பெண், அந்த நபா் கூறிய வங்கிக் கணக்கு எண்ணுக்கு பல்வேறு தவணைகளில் ரூ.8 லட்சத்து 65 ஆயிரத்தை அனுப்பியுள்ளாா்.
அதன்பின், கடந்த 2 வாரங்களுக்கு முன்னா் தனது முதலீட்டுக்கான லாபத் தொகையை அந்த நபரைத் தொடா்புகொண்டு கேட்டுள்ளாா். அப்போது, அந்தப் பெண் செலுத்திய முழுத்தொகையும் வா்த்தக முதலீட்டில் மாட்டிக்கொண்டது என்றும், அதை மீட்க வேண்டும் மேலும் பணம் செலுத்த வேண்டும் என்றும் அவா் கூறியுள்ளாா்.
இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அந்தப் பெண் சைபா் கிரைம் போலீஸாா் இணையதளம் வழியாகவும், நேரிலும் கடந்த மாா்ச் 11-ஆம் தேதி புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இதில், அவரிடம் ரூ.ரூ.8.65 லட்சம் மோசடி செய்தது கோவா மாநிலத் தலைநகா் பனாஜியை சோ்ந்த ராமசந்திரன் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பனாஜி சென்ற சைபா் கிரைம் போலீஸாா் ராமசந்திரனை வெள்ளிக்கிழமை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.