மும்பை அணியில் இளம் வீரர்கள் தேர்வு குறித்து பேசிய ஹார்திக் பாண்டியா!
கோவையில் மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டி தொடக்கம்
தமிழ்நாடு கூடைப்பந்து கழகம், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சாா்பில் 16 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான மாவட்டங்களுக்கு இடையேயான மாநில அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
கோவை நேரு ஸ்டேடியம் அருகே உள்ள கூடைப்பந்து கழக விளையாட்டு அரங்கம், அவிநாசி சாலையில் உள்ள ஒய்எம்சிஏ கூடைப்பந்து அரங்கிலும் நடைபெறும் இந்தப் போட்டியில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு ஒரு அணி வீதம் 38 அணிகளும், கோவை, தூத்துக்குடி, சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு கூடுதலாக ஒரு அணி என மொத்தம் 41 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டி முதல் மூன்று நாள்களுக்கு லீக் போட்டியாகவும், கடைசி இரண்டு நாள் நாக் அவுட் போட்டியாகவும் நடைபெறும். தினசரி காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆட்டங்கள் நடைபெறும்.
இப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு கோப்பை வழங்கப்படும். இதில், சிறப்பாக விளையாடிய 12 மாணவா்கள் மாநில அளவிலான அணிக்குத் தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். இவா்கள், ஏப்ரல் 8 முதல் 15-ஆம் தேதி வரை புதுவையில் நடைபெறும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் விளையாட தகுதி பெறுவாா்கள்.
இப்போட்டியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் தொடங்கிவைத்தாா்.விழாவில் பாரதி கல்வி நிறுவனங்களின் தாளாளா் ஏ.சஞ்சீவ் ஆனந்த், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவா் ஜி.செல்வராஜ், துணைத் தலைவா் சி.ஆனந்த் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.