நம்பமுடியாத ஆட்டம்; நிதீஷ் ராணாவுக்கு கேன் வில்லியம்சன் பாராட்டு!
ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் நிதீஷ் ராணா நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக விளையாடியதாக கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் குவாஹாட்டியில் நேற்று (மார்ச் 30) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கேவை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் அதிரடியாக விளையாடிய நிதீஷ் ராணா 36 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார்.
இதையும் படிக்க: எம்.எஸ்.தோனி தாமதமாக களமிறங்க காரணம் என்ன? ரகசியத்தை உடைத்த ஸ்டீஃபன் ஃபிளெமிங்!
கேன் வில்லியம்சன் பாராட்டு
சிஎஸ்கேவுக்கு எதிராக அதிரடியாக விளையாடிய நிதீஷ் ராணாவை நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஃபீல்டிங்கிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டது. ஷிவம் துபேவின் கேட்ச்சினை கேப்டன் ரியான் பராக் பாய்ந்து ஒற்றைக் கையில் பிடித்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
அதிரடியாக விளையாடிய நிதீஷ் ராணா குறித்து கேன் வில்லியம்சன் பேசியதாவது: சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நிதீஷ் ராணா மிகவும் அற்புதமாக விளையாடக் கூடியவர். ஆனால், சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் அவர் அபாரமாக விளையாடினார். இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு நிதீஷ் ராணா மிகவும் முக்கியமான வீரராக இருக்கப் போகிறார் என நினைக்கிறேன். ராஜஸ்தான் அணியில் போட்டியை வென்று கொடுக்கும் திறமையான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால், சிஎஸ்கேவுக்கு எதிராக போட்டியை வென்று கொடுப்பவராக நிதீஷ் ராணா செயல்பட்டார் என்றார்.
இதையும் படிக்க: 1.78 கோடி பின்தொடர்வோர்.. இன்ஸ்டாகிராமில் சிஎஸ்கேவை முந்திய ஆர்சிபி!
ராஜஸ்தான் ராயல்ஸ் வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி அதன் அடுத்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.