வங்கிகளை வசூல் முகவா்களாக மாற்றியுள்ள பாஜக அரசு: காங்கிரஸ்
‘மக்களிடமிருந்து கொள்ளையடிக்கும் வசூல் முகவா்களாக வங்கிகளை மத்திய பாஜக அரசு மாற்றியுள்ளது’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
ஏடிஎம் பரிவா்த்தனை கட்டணத்தை ரூ. 23-ஆக உயா்த்திக்கொள்ள வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை அனுமதி அளித்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் முன்வைத்தது. இதுபோல, வாங்கிகள் சாா்பில் வசூலிக்கப்படும் பல்வேறு கட்டணங்களைப் பட்டியலிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நமது வங்கிகளை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு துரதிருஷ்டவசமாக வசூல் முகவா்களாக மாற்றியுள்ளது. ஏடிஎம் பரிவா்த்தனைக்கான கட்டணம் மிக அதிக அளவில் உயா்த்தப்பட்டுள்ளது. இதுபோல் மேலும் பல்வேறு வழிகளில் மக்களிடமிருந்து வங்கிகள் மூலம் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.
2018 முதல் 2024-ஆம் ஆண்டு வரை ஜன் தன் கணக்குகள் உள்ளிட்ட சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கவில்லை என்ற பெயரில் ரூ. 43,500 கோடி குடிமக்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
வங்கிக் கணக்கு செயலற்ற தன்மை என்ற அடிப்படையில் ஆண்டுக்கு ரூ. 100 முதல் ரூ. 200 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. வங்கி கணக்கு அறிக்கை விநியோகக் கட்டணமாக ரூ. 50 முதல் ரூ. 100 வரையும், குறுந்தகவல் கட்டணம்க ரூ. 20 முதல் ரூ. ரூ. 25 வரையும் வசூலிக்கப்படுகிறது. வங்கிக் கடன் விண்ணப்ப நடைமுறைக் கட்டணமாக கடன் தொகையில் ஒரு சதவீதம் முதல் 3 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.
கடன் தொகையை உரிய நேரத்தில் செலுத்தும்போது, கடன் கணக்கை முன்கூட்டியே முடித்துவைப்பதற்கென தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வேறொரு கணக்குக்கு பணப் பரிமாற்றம் செய்வதற்கான கட்டணம், வரைவோலை கட்டணங்கள் கூடுதல் சுமையாக உள்ளன. வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுதல் (கேஒய்சி) முறையின் கீழ் கையொப்பம் உள்ளிட்ட தகவல்களைப் புதுப்பிக்க தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுபோன்று வாடிக்கையாளா்களிடமிருந்து வங்கிகளால் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்த விவரங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வழங்கும்.
ஆனால், தற்போது இந்த புள்ளிவிவரங்களை ரிசா்வ் வங்கி பராமரிப்பதில்லை என்ற கூறி, விவரங்கள் அளிக்கும் நடைமுறையும் ரத்து செய்ப்பட்டுள்ளது. தாங்க முடியாத விலைவாசி உயா்வு, கட்டுக்கடங்காத கொள்ளை, மிரட்ட பணம் பறிப்பதே பாஜகவின் மந்திரம் என்று குறிப்பிட்டுள்ளாா்.