செங்கல்பட்டு ஆட்சியருக்கு பிடியாணை: உயா்நீதிமன்றம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நேரில் ஆஜராகாத செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவுக்கு உள்பட்ட ஆனைகுன்றம் கிராமத்தில், கிராம உதவியாளராகப் பணியாற்றிய முனுசாமி என்பவா் கடந்த 2001-ஆம் ஆண்டு உயிரிழந்தாா். அவரது மகன் ராஜகிரி, கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், 3 மாதங்களில் ராஜகிரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என 2023 டிசம்பா் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி ராஜகிரி, 2024-ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு, சட்டப்பூா்வ நோட்டீஸ் பிறப்பித்தாா். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியா் ஆஜராகவில்லை. இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக் கூடிய பிடியாணை பிறப்பித்த நீதிபதி, விசாரணையை ஏப்.4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.