Nitish Kumar: நிதிஷ் குமார் இஃப்தார் விருந்தை முஸ்லிம் அமைப்புகள் புறக்கணித்தது ஏன்?
வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2024-ஐ ஆதரித்ததற்காக, பீகார் முதல்வரும் ஜேடியு தலைவருமான நிதிஷ் குமார் நடத்திய இப்தர் நிகழ்வை முக்கிய முஸ்லிம் அமைப்புகள் புறக்கணித்திருக்கின்றன.
மத்திய பா.ஜ.க அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிராக இருக்கிறது என எதிர்க்கட்சிகள் உள்பட சிறுபான்மையினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த மசோதாவுக்கு பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் ஜேடியு கட்சி ஆதரவை தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கட்சித் தலைவர்கள் முஸ்லிம்கள் புனித மாதமாகக் கருதும் ரமலான் மாதத்தில், இஃப்தார் நிகழ்வை ஒருங்கிணைக்கின்றன. அதன் அடிப்படையில், பீகார் முதல்வரும், ஜே.டி.யு கட்சியின் தலைவருமான நிதின் கட்கரி பீகார் மாநிலத்தின் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளுக்கு இஃப்தார் விருந்து நிகழ்வுக்கு அழைப்புவிடுத்திருந்தார்.
திட்டமிட்டப்படி பாட்னாவில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று இஃப்தார் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இஃப்தார் நிகழ்வில் பீகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் உள்பட முஸ்லிம்களில் ஒருசிலர் கலந்து கொண்டனர்.
ஆனால், பீகாரின் முக்கிய முஸ்லிம் அமைப்புகளான இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், இமாரத் ஷரியா (பீகார், ஒடிசா மற்றும் ஜார்கண்ட்), ஜமியத்-உலேமா-இ-ஹிந்த், ஜமியத் அஹ்லே ஹதீஸ், ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த், கான்குவா முஜிபியா, கான்குவா ரஹ்மானி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நிகழ்வில் பங்கேற்பதை புறக்கணித்திருக்கின்றனர்.
அதற்கான காரணத்தையும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருக்கின்றனர்.
அதில், ``மதச்சார்பற்ற ஆட்சி, சிறுபான்மையினர் உள்ளிட்டவர்களின் உரிமைகளை பாதுகாப்பேன் என்ற வாக்குறுதியின் அடிப்படையில்தான் ஆட்சிக்கு வந்தீர்கள். இருப்பினும், பா.ஜ.க-வுடனான உங்கள் கூட்டணியும், நியாயமற்ற மற்றும் அரசியலமைப்பற்ற வக்ஃப் (திருத்த) மசோதாவை ஆதரிப்பதும் அந்த வாக்குறுதிகளை மீறுகின்றன.

உங்கள் இப்தாரின் நோக்கம் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் வளர்ப்பதாகும், ஆனால் அந்த நோக்கம் வெறும் விருந்துகள் மூலம் மட்டும் அடையப்படுவதில்லை. உறுதியான கொள்கைகளும், நடவடிக்கைகளும் முக்கியம். முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணிப்பது, இத்தகைய விருந்து கூட்டங்களை அர்த்தமற்றதாக்குகிறது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பெண்களுக்கான மையங்கள், பல நூற்றாண்டுகள் பழமையான மதவழிபாட்டு தளங்களையும், அதன் சொத்துக்களையும் இல்லாமல் ஆக்கும். சச்சார் கமிட்டி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சிறுபான்மையினரிடையே வறுமை, பற்றாக்குறை உள்ளிட்டவைகளை அதிகரிக்கும். ஒருவேளை இந்த மசோதா சட்டமாக மாறினால், நீங்களும் உங்கள் ஜே.டி.யு-வும் அதற்கு பொறுப்பாவீர்கள்.
அரசியலமைப்பின் இந்த மீறலுக்கு எதிராக சட்ட, ஜனநாயக மற்றும் அரசியல் வழிமுறைகள் மூலம் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்." எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.
இந்தக் கடிதங்களின் நகல்களை ஆர்.ஜே.டி சமூக ஊடகங்களில் பரப்பியதால் மேலும் விவாதங்கள் அதிகரித்துள்ளன.
இந்தக் கடிதம் தொடர்பாக பேசிய ஜே.டி.யு தேசிய செயல் தலைவரும், எம்.பி-யுமான சஞ்சய் குமார், ``பிரார்த்தனைகளில் அரசியல் செய்வது சரியல்ல. கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் முஸ்லிம்களின் நலனுக்காக நிறைய செய்துள்ளார். அவரது பணி இப்போது இப்தாரை வைத்து அரசியல் செய்பவர்கள் உள்பட அனைவருக்கும் தெரியும்" என்று விமர்சித்திருக்கிறார்.

இதற்கிடையில், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தனது மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியின் இல்லத்தில் இன்று இப்தார் விருந்து அளிக்கவிருக்கிறார். அதில் முஸ்லிம் அமைப்புகள் கலந்துகொள்வார்களா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
