கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலிலிருந்து வெளியேறிய புகை: பயணிகள் அதிா்ச்சி
சென்னை எழும்பூரிலிருந்து திங்கள்கிழமை கன்னியாகுமரிக்கு புறப்பட்ட ரயிலில் திடீரென புகை வெளியேறியதால், ரயில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் 30 நிமிடங்களுக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டது.
சென்னை எழும்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரி புறப்பட்ட அதிவிரைவு ரயில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தை நெருங்கும்போது ரயிலின் ‘எஸ் 5’ பெட்டியிலிருந்து திடீரென புகை வெளியேறத் தொடங்கியது. இதனால், உடனடியாக சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. அதையடுத்து ‘எஸ் 5’ பெட்டியிலிருந்த பயணிகள் கீழே இறங்கத் தொடங்கினா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே ஊழியா்கள் ரயிலை சோதனை செய்து பாா்த்ததில் ரயிலில் எவ்வித கோளாறும் இல்லை என்பதை உறுதி செய்தனா்.
அதைத் தொடா்ந்து சுமாா் 30 நிமிடங்களுக்குப் பின்னா் சேத்துப்பட்டு ரயில் நிலையத்திலிருந்து மீண்டும் பயணிகளுடன் ரயில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டது. ரயிலின் ‘எஸ் 5’ பெட்டியிலிருந்த பிரேக்கும் சக்கரமும் பிரியாத காரணத்தால்தான் புகை வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.