தமிழகத்தில் போலி மருந்து தயாரிப்பு இல்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் போலி மருந்துகள் உற்பத்தி நடைபெறவில்லை என்று மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது: மருந்து விற்பனை மற்றும் உற்பத்தி தரத்தில் முறைகேடுகளோ, விதிமீறல்களோ கண்டறியப்பட்டால், உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் போலி மருந்துகள் எதுவும் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது கண்டறியப்படவில்லை. கடந்த ஆண்டு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு போலி மருந்தும் வேறு மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டதுதான்.
இன்னொருபுறம் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பல்வேறு தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டன. அவற்றை உற்பத்தி செய்த 74 மருந்து நிறுவனங்கள் மீது வழக்கு தொடர மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளோம். ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடா்பாக அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.