``டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால் குண்டு மழை பொழிவோம்'' - ஈரானை எச...
மக்கள் பிரச்னையை எழுப்புவது எங்கள் கடமை: இபிஎஸ்
தமிழக சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னையை எழுப்புவது எதிர்க்கட்சியின் கடமை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர அதிமுகவினர் முயற்சித்தனர். ஆனால், முன்னதாகவே அனுமதி பெறாததால் தீர்மானத்தை கொண்டுவர பேரவைத் தலைவர் அப்பாவு அனுமதிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் அவர்களை ஒருநாள் கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அப்பாவு உத்தரவிட்டார்.
இதுகுறித்து சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களுடன் இபிஎஸ் பேசியதாவது:
”சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னையை பேசுவதற்கு திமுக அரசு அனுமதி வழங்குவதில்லை. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது நேரமில்லா நேரத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்கள், நாங்கள் பதிலும் கூறியுள்ளோம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் முத்துக்குமாரை கஞ்சா வியாபாரிகள் கல்லை தலையில் போட்டு கொன்றுள்ளனர். அவரது நண்பர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.
திமுக ஆட்சியில் போதைப் பொருள்களை சுதந்திரமாக விற்கின்றனர். காவலரையே கொலை செய்யும் அளவுக்கு போதைப் பொருள் வியாபாரிகள் துணிவுபெற்றுள்ளனர். போதைப் பொருள் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
காவல்துறையினர் காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர முயன்றோம். ஆனால், எங்களை அனுமதிக்கவில்லை.
எங்களை திட்டமிட்டு சட்டப்பேரவைத் தலைவர் வெளியேற்றியுள்ளார். மக்கள் பிரச்னையை கவனத்துக்கு கொண்டுவருவதுதான் எங்கள் நிலைபாடு. சர்வாதிகார போக்கை சட்டப்பேரவையில் அரங்கேற்றியுள்ளனர்” என்றார்.