அம்பானியின் மகன் இஸட் பிரிவு பாதுகாப்புடன் 5-ஆவது நாளாக நடைப்பயணம்! எதற்காக?
அவிநாசி: பத்திரப்பதிவுக்கான தடைச் சான்றை நீக்காததைக் கண்டித்து ஏப். 1-ல் போராட்டம்!
அவிநாசியில் திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சொந்தமான இடத்தைத் தவிர மற்ற நிலங்களுக்கு பெற்றுள்ள பத்திரப் பதிவுக்கான தடை சான்றை நீக்காததைக் கண்டித்து, திருமுருகன்பூண்டி கோயில் செயல் அலுவலகம் முன் ஏப்ரல் 1 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட கோவை பிரதான சாலை, மேற்கு, வடக்கு, கிழக்கு ரத வீதிகளில் 200-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன.
இப்பகுதியில் உள்ள வணிக நிறுவனத்தினர் தற்போது தங்களது நிலங்களை விற்கவோ, வாங்கவோ, வங்கியில் கடன் பெறவோ இயலாமல் தடை விதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகின்றனர்.
இந்நிலையில், அவிநாசி ரத வீதிகள் வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அவிநாசியில் நடைபெற்றது.
இதையடுத்து வியாபாரிகள் கூறியதாவது,
''அவிநாசி மேற்கு ரத வீதியில் 85- டி மற்றும் 85 -இ திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என இந்து அறநிலையத் துறையினர் தடைச் சான்று பெற்றுள்ளனர்.
ஆனால், இதில் 85-டி யில் உள்பிரிவு 427-9 மற்றும் 85-இல் உள் பிரிவு 433-21 மட்டுமே கோயிலுக்கு சொந்தமானது எனத் தெரியவருகிறது.
இருப்பினும் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக மற்ற நிலங்களுக்கும் சார்பதிவாளர் அலுவலகத்தில் தடை விதிக்கின்றனர். இதனால் வங்கிக் கடன் கூட பெற முடியாமலும், தொழிலை மேம்படுத்த முடியாமல் உள்ளோம்.
ஆகவே, கோயில் நிலத்தை தவிர மீதமுள்ள நிலங்களுக்கு தடையின்மை சான்று வழங்கி, பத்திரப்பதிவுக்கு அனுமதிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இருப்பினும் திருமுருகன்பூண்டி இந்து சமய அறநிலையத் துறையினர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சொந்தமான இடத்தை தவிர மற்ற நிலங்களுக்கு பெற்றுள்ள பத்திரப் பதிவுக்கான தடைச் சான்றை உடனடியாக நீக்கி தடையின்மை சான்று வழங்கக் கோரி, திருமுருகன்பூண்டி கோயில் செயல் அலுவலர் அலுவலகம் முன் ஏப்ரல் 1-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்'' என்றனர்.