குஜராத் பட்டாசு ஆலையில் பயங்கர தீ: 13 பேர் பலி!
குஜராத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் பல தொழிலாளிகள் தீ விபத்துக்குள் சிக்கியிருக்கும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தீசா நகரில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலையின் துப்பாக்கிப் பவுடர் தயாரிக்கும் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டு பரவியிருக்கக் கூடும் என்று முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிவிபத்தின் எதிரொலியாக அருகிலிருந்த பட்டாசு கிடங்கும் இடிந்து விழுந்துள்ளது. தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த நிலையில், 200 மீட்டர் தொலைவுக்கு பட்டாசுகள் வெடித்துச் சிதறியுள்ளன.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்துள்ளனர். மீட்கப்படுபவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இதுவரை 13 தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பலர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
மேலும், அப்பகுதியில் உள்ள வயல்களில் மனித உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.