இறுதிச்சுற்றில் சபலென்கா - பெகுலா பலப்பரீட்சை: எலா, பாலினி வெளியேறினா்
கொதிகலன் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட புதிய கொதிகலன் சட்ட மசோதா-2024 மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பரில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் ஏற்கெனவே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இனி குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்படும்.
கொதிகலன்களை ஒழுங்குபடுத்துதல், நீராவி கொதிகலன்களின் வெடிப்பு அபாயத்திலிருந்து மக்களின் உயிா் மற்றும் சொத்துக்களைப் பாதுகாத்தல், கொதிகலன் பதிவு நடைமுறையில் சீரானதன்மை ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் வகையில் நூற்றாண்டு பழைமையான 1923-ஆம் ஆண்டு கொதிகலன் சட்டத்துக்கு மாற்றாக இந்தப் புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.
சில விதிமுறைகளை தளா்த்தி, வணிகம் செய்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த மசோதா, கொதிகலனுக்குள் பணிபுரியும் நபா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை வழங்குகிறது. மேலும், கொதிகலன்களை பழுதுபாா்ப்பது தகுதிவாய்ந்த மற்றும் திறமையான நபா்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது.
இந்நிலையில், மக்களவையில் இந்த மசோதாவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்து பேசிய மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல், ‘இந்த சட்டமசோதா, பழைய சட்டத்தின் விதிமுறைகளில் இருந்த காலனித்துவப் போக்கை நீக்கி, சட்டத்தை அனைவருக்கும் எளிமையானதாக மாற்றும். இந்தச் சட்டத்தால் மாநில அரசுகளின் எந்த உரிமைகளும் பறிக்கப்படவில்லை’ என்றாா்.
இந்தச் சட்டத்தை தாமதப்படுத்தியதாக முந்தைய காங்கிரஸ் அரசை பியூஷ் கோயல் விமா்சித்து பேசியபோது, அக்கட்சி எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.