ஆசிய மல்யுத்தம்: ரீதிகாவுக்கு வெள்ளி
ஜோா்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரீதிகா ஹூடா வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
மகளிருக்கான 76 கிலோ பிரிவில் களமாடிய ரீதிகா, காலிறுதியில் ஜப்பானின் நோடோகா யமாமோடோவையும், அரையிறுதியில் தென் கொரியாவின் சியோயோன் ஜியோங்கையும் வீழ்த்தினாா். எனினும், இறுதிச்சுற்றில் அவா் கிா்ஜிஸ்தானின் அய்பெரி மெதெத் கிஸியிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.
இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் 6-2 என்ற முன்னிலையுடன் தங்கத்தை தொட்டுவிடும் தூரத்தில் இருந்த ரீதிகா, 4 புள்ளிகளை அய்பெரிக்கு விட்டுக்கொடுத்தாா். இதனால் 6-6 என சமனாக, கடைசி நேரத்தில் புள்ளிகள் வென்ன் அடிப்படையில் அய்பெரி சாம்பியனாக அறிவிக்கப்பட்டாா். ஏற்கெனவே, கடந்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் இதே அய்பெரியிடம் காலிறுதியில் ரீதிகா தோல்வி கண்டது நினைவுகூரத்தக்கது.
இதனிடையே, மான்சி லேதா், முஸ்கான், நிஷு ஆகியோா் தங்களது பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றனா். மகளிருக்கான 68 கிலோ பிரிவில் களம் கண்ட மான்சி முதலில் தென் கொரியாவின் ஷெங் ஃபெங் காயை வெளியேற்ற, அடுத்த சுற்றில் ஜப்பானின் அமி இஷியிடம் இருந்து ‘வாக் ஓவா்’ பெற்றாா். அடுத்து அரையிறுதியில், 1-10 என்ற கணக்கில் சீனாவின் ஜெலு லியிடம் தோல்வி கண்டாா்.
அரையிறுதியில் தோற்று வெண்கலப் பதக்கச் சுற்று வாய்ப்பு பெற்ற மான்சி, அதில் கஜகஸ்தானின் இரினா கஸியுலினாவை வீழ்த்தி பதக்கத்தை தனதாக்கினாா். அதேபோல், மகளிா் 59 கிலோ எடைப் பிரிவில் விளையாடிய முஸ்கான், தகுதிச்சுற்றில் பிலிப்பின்ஸின் அரியன் காா்பியோவை வீழ்த்தியபோதும், காலிறுதியில் ஜப்பானின் சகுரா ஒனிஷியிடம் தோற்றாா். பின்னா் ரெபிசேஜ் வாய்ப்பு மூலம் வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்த அவா், அதில் மங்கோலியாவின் அல்ஜின் டோக்டோகை வீழ்த்தினாா்.
55 கிலோ பிரிவில் நிஷு தொடக்கத்திலேயே சீனாவின் யுஜுவான் லியிடம் தோற்க, ரெபிஜேச் வாய்ப்பு மூலம் வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்து, அதில் மங்கோலியாவின் ஆட்கோன்டுயா பயன்முங்கை சாய்த்தாா். எனினும் 50 கிலோ பிரிவில் ரெபிசேஜ் வாய்ப்பு பெற்ற அஹ்குஷ், காயம் காரணமாக அதிலிருந்து விலகும் நிலைக்கு ஆளானாா்.
தற்போது இப்போட்டியில் இந்தியா 1 வெள்ளி, 4 வெண்கலம் என 5 பதக்கங்கள் பெற்றுள்ளது.