சபரிமலை ஐயப்பன் கோயில்: இன்று பங்குனி உத்திர கொடியேற்றம்; எப்போது வரை நடை திறந்த...
இனி அபராதம் செலுத்தவில்லை எனில் ஓட்டுநர் உரிமம் ரத்து! - வருகிறது புதிய விதிகள்!!
சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை 3 மாதங்களுக்குள் செலுத்தவில்லை என்றால் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் புதிய விதிகளை மத்திய அரசு கொண்டுவரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாலைகளில் விபத்துகளைத் தவிர்க்கும்பொருட்டு போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு தற்போது இ-செல்லான் மூலமாக அபராதம் விதிக்கப்படுகிறது.
அதாவது சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது செல்வது, மோசமாக வாகனம் ஓட்டுவது, அதிக வேகத்தில் ஓட்டுவது போன்ற விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அபராதச் சீட்டு(இ-செல்லான்) வழங்கப்படுகிறது. உடனடியாக அபராதத் தொகை வசூலிக்கப்படாததால் பலரும் இதனை செலுத்துவதில்லை.
இந்நிலையில் சாலை விதிகளைக் கடுமையாக்கவும் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடமிருந்து அபராதங்களை வசூலிக்கும்பொருட்டும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய அரசு புதிய விதிமுறைகளைக் கொண்டுவர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி இ- செல்லான்களை 3 மாதங்களுக்குள் செலுத்தவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் வகையிலான விதிமுறைகள் வரவுள்ளன.
அதேபோல ஒரு நிதியாண்டில் மூன்று இ- செல்லான்கள் வழங்கப்பட்டால், அதாவது மூன்று முறை விதிகளை மீறுபவர்களுக்கு 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும்.
முந்தைய நிதியாண்டில் இரண்டு இ-செல்லான் வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை செலுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
புதிய விதிகளின்படி சாலை விதிகளை மீறுவோருக்கு 3 நாள்களில் இ-செல்லான் அனுப்பப்படும். விதிகளை மீறியவர்கள் 30 நாள்களுக்குள் அந்த அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும். 30 நாள்களுக்குள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. இ-செல்லானில் ஏதேனும் தவறு இருக்கும்பட்சத்தில் 30 நாள்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும், இல்லையெனில் அபராதத்தை ஏற்றுக்கொண்டதாகவே பொருள்படும். அதுவே அதிகபட்சமாக 90 நாள்களுக்குள் செலுத்தவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் அல்லது ஆர்சி சான்றிதழ் ரத்து செய்யப்படும்.
ஒட்டுமொத்தமாக நாட்டில் 40% இ- செல்லான் அபராதத் தொகை மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் தில்லியில் 14% இ-செல்லான் தொகை மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 21%, தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 27%, ஒடிசா - 29%, ராஜஸ்தான், பிகார், மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரம், ஹரியாணாவில் அதிகமாக 62 -76% வரை இ- செல்லான் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தவறான செல்லான்கள், செல்லான் தாமதமாக வருவது என வாகன ஓட்டிகள் தங்கள் அபராதத் தொகையை செலுத்தாததற்கும் சில காரணங்கள் கூறப்படுகின்றன. எனவே இதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இதையும் படிக்க | ஓய்வு பெறுகிறாரா பிரதமர் மோடி? - சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!