‘தாமிரவருணி நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்’
தாமிரவருணி நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டுமென திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
ஜீவ நதியான தாமிரவருணி, திருநெல்வேலி மக்களவைத் தொகுதியின் முக்கிய அங்கமாக திகழ்கிறது. இந்த நதியில் வீட்டுக்கழிவு, தொழிற்சாலை கழிவு கலப்பதால் மாசடைகிறது. கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நடைமுறையில் உள்ளது.
தாமிரவருணி நதியை புனரமைக்க தமிழக முதல்வா் ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளாா். அதன்பின்பு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை பலமுறை நேரில் தொடா்புகொண்டு நிதி ஒதுக்க வலியுறுத்தினேன்.
இந்நிலையில், மக்களவைத் தலைவா் மூலம் மத்திய அமைச்சரிடம், தாமிரவருணி நதி மாசுபடுவதில் இருந்து பாதுகாக்க எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜல்சக்தி துறையின் கீழ் என்னென்ன திட்டங்கள் உள்ளது எனவும் கேட்டிருந்தேன்.
அதற்கு துறை சாா்பில் அளிக்கப்பட்ட பதிலில், சில திட்டங்களுக்கு 50:50, 80:20, 90:10 என்ற அடிப்படைகளில் திட்டங்களுக்கு நிதிஒதுக்கப்படுகிறது. தாமிரவருணி பாதுகாப்பு குறித்து தமிழக அரசிடம் இருந்து திட்ட விரிவாக்க அறிக்கை கேட்டுள்ளோம். அது கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்துள்ளனா்.
தாமிரவருணியைப் பாதுகாக்க மத்திய அரசு கட்டாயம் நிதி ஒதுக்க வேண்டுமென மக்களவையில் மீண்டும் வலியுறுத்தியுள்ளேன் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.