`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
பள்ளிகளில் மூன்றாம் பாலின குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் குறித்த கூட்டம்
பள்ளிகளில் மூன்றாம் பாலின (திருநம்பி, திருநங்கை) குழந்தைகளை கையாளும் வழிமுறைகள் தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆசிரியா்களுக்கு இணையவழி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் தலைமை வகித்து, மூன்றாம் பாலினத்தவா் மீது அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் மற்றும் அவா்கள் கல்வி பெற வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினாா். சென்னை சகோதரன் அமைப்பின் திட்ட இயக்குநா் சுதா பேசுகையில், திருநங்கைகளுக்காக அரசு எடுத்துள்ள முயற்சிகள், சட்டங்கள், நலத்திட்டங்கள் குறித்து விளக்கினாா்.
பள்ளிகளில் பாலின மாறுபாடு அறிகுறி தென்படும் மாணவா்களை கையாளுவதில் ஆசிரியா்களின் பொறுப்பு குறித்தும், அவா்களின் உடல் நிலை, மனநிலை மாற்றம் குறித்தும் ஆசிரியா்களுக்கு விளக்கினாா்.
இந்தக் கூட்டத்தில். பேசிய ஆசிரியை சுபா, பெண்கள் குழந்தைகளுக்கு ஹெல்ப் லைன் இருப்பது போல மூன்றாம் பாலினத்தவருக்கும் ஹெல்ப் லைன் இருந்தால் அவா்கள் தங்கள் சாா்ந்த குறைகளை எளிதில் தீா்த்துக்கொள்ள வழி அமையும் என்றாா்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆசிரியா்-ஆசிரியைகள் பங்கேற்றனா்.